சிவாஜி கணேசனின் நினைவு நாள் - நா.முத்துநிலவன் பங்கேற்பு

நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் 12ஆவது நினைவு நாள்

சிவாஜி மன்றத்தின் புதுக்கோட்டை மாவட்டத் தலைவர் சுப்பையா தலைமையில் திருக்கோகர்ணம் ஐடிஐ அருகில்உள்ள பள்ளத்திவயல் சாராள் சிறுவர் இல்லத்தில் அன்னதானம் நடந்தது. சிறப்பு விருந்தினராக்க் கலந்து கொண்டு குழந்தைகளுக்கான அன்னதானத்தைத் தொடங்கி வைத்தார் கவிஞர் முத்துநிலவன். (படம்)
அப்போது அவர் “சிவாஜி கணேசனின் ஆளுமை இன்றைய நம் தமிழ்த்திரைப்படக் கலைஞர்களிடம் நீடிக்கிறது. பள்ளிக் குழந்தைகளின் மாறுவேடப் போட்டிகள் தமிழ்நாட்டில் எங்கே நடந்தாலும் அங்கு நம் குழந்தைகளின் மழலை வாயில் வீரபாண்டிய கட்டபொம்மன் வேடமும், வீர வசனமும் தவறாமல் இடம் பெறுகிறது என்றால், அவரது கலை இப்போதும் வாழ்கிறது என்றுதானே பொருள்? சிவாஜிக்கு மத்திய அரசு சிறந்த நடிகர் விருது தரவில்லை என்று சிலர் இன்னும் குறைப்பட்டுக் கொள்கிறார்கள். பட்டதாரிகளுக்குத்தான்  பட்டம் தர முடியும். பல்கலைக்கழகத்திற்கே யார் பட்டம் தரமுடியும்? என்று கேட்டுப் புகழாரம் சூட்டினார்.
அவரது முதல்படமே தமிழ்த்திரைப்பட வரலாற்றில் புயலாக வந்தது. அதுமுதல் அவரது உச்சரிப்பு, மாணவர்களுக்குத் தமிழ்ப்பாடம் சொல்லித்தரும் நம் தமிழாசிரியர்களுக்கே தமிழ் கற்றுத்தருவதாயிருந்தது. அவரது வீரபாண்டிய கட்டபொம்மன், கப்பலோட்டிய தமிழன் படங்கள் இன்றும் தேசப்பற்றைத் தருவதாக உள்ளன. இப்பொழுது வரும் குத்து, தூள், சுள்ளான், கில்லி முதலான தமிழப்படத் தலைப்புகளை வைத்தவர்கள் அவரிடமிருந்து கற்றுக்கொள்ளவில்லை. அதனால்தான் மறுதயாரிப்பில் வந்த சிவாஜிகணேசனின் கர்ணன் படம் தமிழகத்தின் பல இடங்களில் நூறு நாள்களைக் கடந்து ஓடியதை இன்றைய திரைப்படக் கலைஞர்கள் கவனிக்க வேண்டும் சிவாஜியின் படங்கள் பலவும் இன்றைய தமிழர்களுக்குப் பாடமாகத் திகழ்கின்றன. பண்பாட்டை, குடும்பப் பாசத்தை, கடமை உணர்வை, உழைப்பின்மேன்மையை அவர்படங்களில் பல எடுத்துக் காட்டுவனவாக உள்ளன இவ்வாறு கவிஞர் முத்துநிலவன் பேசினார்.
சிவாஜி மன்றத்தின் மாவட்டப் பொதுச் செயலர் நாகூர்கனி, நகரத் தலைவர் சுப்ரமணியன், நகரச் செயலர் குமார், மாவட்டப் பொருளர் குணசேகரன், நகரத் துணைச்செயலர் அப்துல் ரசாக், மாவட்டச் செயலர் ஸ்ரீதர் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர். சாராள் சிறுவர் இல்லத்தில் உள்ள 45சிறுவர்-சிறமிகள் மற்றும் முதியோர்களுக்கு அன்னதானம் செய்த சிவாஜி மன்ற நிர்வாகிகளுக்கு சாராள் சிறுவர் இல்லத்தின் நிர்வாகிகள் பிலிப் டைசன் தம்பதியினர் நன்றி தெரிவித்துக் கொண்டனர்.
----------------------------------------------------------------
செய்தி – தினமணி 23-07-2013 (திருச்சிப் பதிப்பு, புதுக்கோட்டை, பக்கம்-3)
புகைப்படம் – திருக்கோகர்ணம் அசினா ஸ்டுடியோ-அப்துல் ரசாக்.

----------------------------------------------------------------

1 கருத்து:

  1. உண்மைதான் அண்ணா கட்டபொம்மன் என்றால் சிவாஜி தானே நினைவிற்கு வருகிறார் .இன்று அத்தகைய முன்னுதாரணங்கள் மாணவர்களுக்கு இல்லையே?வருத்தம் தான் .

    பதிலளிநீக்கு