கார்ல் மார்க்ஸ் பிறந்தநாள் விழாக் கருத்தரங்கம்


புதுக்கோட்டை கந்தர்வன் நூலகத்தில் நடந்தது

 நூல்களை வழங்குகிறார் நல்லாசிரியர் பாவலர் பொன்.கருப்பையா.
அருகில் -இடமிருந்து- கந்தர்வன் நூலக நிர்வாகி கவிவர்மன், இந்தியக் கம்யூனிஸ்ட் மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலர் மா.சின்னத்துரை, உணவக உரிமையாளர் சங்கத் தலைவரும், கந்தர்வன் நூலக வளர்ச்சிக்குழுத் தலைவருமான சண்முக.பழனியப்பன்(நூல்கள் பெறுபவர்), உள்பக்கமாக அறிவியல் இயக்க மாவட்டத் தலைவர் லெ.பிரபாகரன், தமுஎகச மாவட்டச் செயலர் கவிஞர் ரமா.ராமநாதன், நா.முத்துநிலவன் ஆகியோர் உள்ளனர். புகைப்படம்-“தினகரன்“அழகிரி.
-----------------------------------
புதுக்கோட்டை-மே.6 புதுக்கோட்டை அய்யனார்புரத்தில் உள்ள ‘கந்தர்வன் நூலகத்தில் நடந்த உலகத்தை மாற்றியமைத்த மாமேதை கார்ல் மார்க்ஸின் 196ஆவது பிறந்தநாள் விழா சிறப்புக் கருத்தரங்கில் பேசிய மார்க்சிஸ்ட் கம்ய+னிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் மா.சின்னத்துரை, இளைஞர்களும் மாணவர்களும் வாசிப்பை நேசிக்க வேண்டும் என்றார்
மார்க்ஸ்-பிறந்தநாள் சிறப்புக் கருத்தரங்கத்திற்கு, நூலக வளர்ச்சிக்குழுத் தலைவரும், மாவட்ட உணவக உரிமையாளர் சங்கத்தின் தலைவருமான சண்முக.பழனியப்பன் தலைமை தாங்கினார்.  அவர் பேசும்போது, ஆசிரியராக வேண்டும் என்ற தன் கனவு நிறைவேறாவிட்டாலும், தடம்பதித்த தத்துவ ஆசிரியர் பலரின் நூல்கள் தனது வாழ்க்கைத் தடத்தை மாற்றியமைத்த குறிப்புகளைப் பகிர்ந்து கொண்டார்.
பாவலர் பொன்.கருப்பையா, களக்கமங்கலம் சக்திவேல், காசாவயல் கண்ணன், எஸ்.ஏ.கருப்பையா, சிவ. காவிரிச்செல்வன், சபரிநாதன், பேச்சாளர் மகா.சுந்தரின் மகள் மாணவி சுபாஷிணி ஆகியோர் சமூக உணர்வுமிக்க இசைப்பாடல்களைப் பாடினர்.

எனக்குப் பிடித்த புத்தகம் எனும் பொதுத் தலைப்பிலான கருத்தரங்கில்
வெ.சாமிநாத சர்மா எழுதிய காரல்மார்க்ஸ் வாழ்க்கை வரலாறு நூல்பற்றி
அறிவியல் இயக்க மாவட்டத்தலைவர் லெ.பிரபாகரனும்
தனுஷ்கோடி ராமசாமி எழுதிய தோழர் நாவல்பற்றி
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்க மாவட்டச்செயலர் ரமா.ராமநாதனும்
இரா.ஜவகர் எழுதிய கம்ய+னிசம் நேற்று-இன்று-நாளை நூல்பற்றி
மாநிலத் துணைத்தலைவர் ஆர்.நீலாவும்
nஉறலன் கெல்லரின் என் கதை நூல்பற்றிக்
கவிஞர் கவிவர்மனும், கருத்துரையாற்றியதோடு,
தான் வாசித்த புத்தகங்களை கந்தர்வன் நூலகத்திற்கே வழங்கி
நூல்களைப் படிக்காத அனைவரையும் படிக்குமாறு கேட்டுக்கொண்டார்கள்.

கந்தர்வனை (சு) வாசிப்போம் எனச் சிறப்புரையாற்றிய கவிஞரும் பாரதிதாசன் பல்கலைக்கழக ஆட்சிமன்றக் குழு உறுப்பினருமான கவிஞர் தங்கம் மூர்த்தி மிகச்சிறந்த சிறுகதை எழுத்தாளராகவும், எழுச்சிக்கவிஞராகவும் மட்டுமின்றி, அரசு ஊழியர்களின் போராட்டத்தலைவராகவும் புதுக்கோட்டையில் வாழ்ந்து மறைந்த கந்தர்வனின் வாழ்க்கை மற்றும் படைப்புச் சிறப்புகளை இளைய படைப்பாளிகள் பின்பற்றி எழுதவும் அவர்போல வாழவும் உறுதியேற்க வேண்டும் என்று புகழாரம் சூட்டினார்.

வாசிப்பை நேசிப்போம் எனும் தலைப்பில் நிறைவாகப் பேசிய இந்திய கம்யூனிஸ்ட் மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் மா.சின்னத்துரை, இளைஞர்களுக்கும் மாணவர்களுக்கும் பயன்படும்படியான போட்டித் தேர்வு நூல்களோடு, அவர்களின் சிந்தனையோட்டம் சமூக உணர்வு மிக்கதாக வளரும் வகையிலும் நூல்களைச் சேகரித்து இளைஞர்-மாணவர்களின் வாசிப்பை நேசிக்கும்படியான பயிற்சிக் களமாகக் கந்தர்வன் நூலகம் திகழவேண்டும் என்பதே தமது ஆசை என்றும் தெரிவித்தார்.

தொகுப்புரையாற்றிய கவிஞர் முத்துநிலவன், இந்தஆண்டு, ஆட்சிப்பணித்தேர்வில் இந்திய அளவில் தேர்வு செய்யப்பட்ட தொள்ளாயிரம் பேரில் சுமார் நூறுபேர் தமிழகத்திலிருந்து தேர்வு பெற்றிருப்பதையும், கடந்த பத்து ஆண்டுகளில், இந்தியாவில் கல்வியறிவு சதவீதம் உயர்ந்திருப்பதையும் அதிலும் குறிப்பாகப் பெண்கல்வி, ஆண்களைவிடப் பத்து சதவீதம் அளவிற்கு உயர்ந்திருப்பதையும் பெருமையுடன் குறிப்பிட்டார். 

விழாவில் பேசிய பலரும் கவிஞர் கந்தர்வன் நூலகம், ஆய்வாளர்களுக்காக மட்டுமின்றி, வேலைதேடும் ஐ.ஏ.எஸ், மற்றும் அரசுப் பணியாளர் தேர்வுகளுக்குத் தயாராகும் ஏழை மாணவர்-இளைஞர்களுக்கும் பயன்பட வேண்டும். அதற்கான விலைமதிப்பு மிகுந்த புத்தகங்களை வாங்கி, இயன்றவரை பயிற்சி வகுப்புகளையும் இலவசமாகச் செய்ய வேண்டும். பெரும்படிப்புப் படித்தாலும் அவர்களின் சமூக உணர்வே மக்களுக்குப் பயன்படும்.அதுவே காரல்மார்க்ஸ், கந்தர்வன்  போன்ற நமது முன்னோடிகளுக்குச் செய்யும் உண்மையான அஞ்சலி எனக்கூறி அதற்கு உதவுவதாகவும் தெரிவித்தனர்.
--------------------------------------------------

தலைமை ஆசிரியர் கழக மாநிலப் பொதுச்செயலர் சாமி.சத்தியமூர்ததி  

 நூல்கள் வழங்குகிறார்-   புகைப்படம்-திரு.ராஜ்குமார், புதுக்கோட்டை.
-----------------------------------------------
பாரதிதாசன்  பல்கலைக்கழ ஆட்சிக்குழு உறுப்பினர் கவிஞர் தங்கம் மூர்த்தி, தலைமை ஆசிரியர்கழகப் பொதுச்செயலர் சாமி.சத்தியமூர்த்தி, “நல்லாசிரியர்பாவலர் பொன்.கருப்பையாகவிஞர் கீதா,முதலானோர் நூலகத்திற்குப் புத்தகங்கள் வழங்கினர்.

விழாவில், ஓய்வுபெற்ற மாவட்ட வருவாய் அலுவலர்கள் அ.முத்துகிருஷ்ணன், மு.முத்தையா, திருச்சி ஊடக எழுத்தாளர் வில்வம், எழுத்தாளர் அவுரங்கசீப், த.நா.ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணித் தலைவர் கருப்பையா, சிஐடியூ தலைவர் ஜியாவுதீன், புதுகை பிலிம்சொசைட்டி கவிஞர் இளங்கோ, பி.எஸ்.என்.எல்.உழைக்கும்பெண்கள் ஒருங்கிணைப்பாளர் மல்லிகா, தமிழாசிரியர் கழகத்தலைவர்கள் கும.திருப்பதி குருநாதசுந்தரம் மகா.சுந்தர்,  ஆசிரியர் தமிழ்ச்செல்வி, கவிஞர்கள் ஸ்டாலின் சரவணன்ராசி.பன்னீர்ச்செல்வன்,   கவிபாலாபீர்முகமது, புதுகைப் புதல்வன்சிவக்குமார் உள்ளிட்ட திரளானோர் கருத்தரங்கில் கலந்துகொண்டனர்.

முன்னதாக, எல்ஐசி ஊழியர் சங்கத் தலைவர் கண்ணம்மா வரவேற்றார்
ஓய்வு பெற்ற ஆசிரியரும் ஓய்வறியா மக்கள் தொண்டருமான தோழர் அ.பாலசுப்பிரமணியன் நன்றி கூறினார்.
-----------------------------------------------------
இணைப்பிற்கு - http://dinamani.com/edition_trichy/pudukottai/2013/05/06/ 
செய்தி - திரு மோகன் ராம்,  தினமணி நாளிதழ், புதுக்கோட்டை
                  தோழர் சு.மதியழகன், தீக்கதிர் நாளிதழ், புதுக்கோட்டை
புகைப்படங்கள் - திரு அழகிரி, தினகரன் நாளிதழ், புதுக்கோட்டை
                                    திரு.ராஜ்குமார், புதுக்கோட்டை.

வெளியிட்டமைக்கு நன்றி - தினமணி, தினகரன் நாளிதழ்கள் - 06-05-2013,
                                                          மற்றும் தீக்கதிர் நாளிதழ் -07-05-2013
---------------------------------------------------------

5 கருத்துகள்:

  1. அற்புதம் நிலவன் தோழர்...
    கந்தர்வன் நூலக நிகழ்வுகளில் கலந்துகொண்டதோடு
    எங்கள் பணி முடிந்துவிட்டது. ஊருக்கும் உலகத்திற்கும நடந்த நல்லவைகளை எடுத்துரைக்கும் உங்கள் பணியை தலைவணங்கி வரவேற்கிறேன்...
    ................அனபுடன் கவிவர்மன்

    பதிலளிநீக்கு
  2. விழாவை நேரில் பார்த்த மாதிரி இருந்தது. கதை கட்டுரை கவிதைகளின் ஊடே இன்றைய இளைஞர்களை நற்பதவிகளுக்கு முயன்றிட ஊக்குவிக்கும் விதமாக ஐ.ஏ.எஸ், குரூப்-1, தமிழ்நாடு சர்வீஸ் கமிஷன், வங்கித் தேர்வகம் (IBPS) போன்ற தேர்வுகளுக்கான பயிற்சி நூற்களை ஒவ்வொன்றும் 10 படிகள் வீதம் வழங்கிடப்பெற்று நூலகத்தில் இடம் பெறச் செய்தால் அவ்வூர் இளைஞர்கள் நல்ல பயன் பெறுவர். (ஏற்கெனவே இம்மாதிரி தேர்வுகளில் பங்குபெற்று வென்றவர்களிடம் கேட்டுப் பெறலாம்). கந்தர்வன் நூலகம் தொடர்ந்து சிறப்பாக இயங்கிட எனது வாழ்த்துக்கள். – நியுஜெர்சியிலிருந்து கவிஞர் இராய. செல்லப்பா.

    பதிலளிநீக்கு
  3. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  4. காரல்மார்க்ஸ் பிறந்த நாள் விழாக் கருத்தரங்க நிகழ்வுகளை அரங்கத்தில் தொகுத்தளித்ததைவிட வலைத்தளத்தில் நேர்த்தியாக வழங்கியுள்ள பாங்கு அருமை.தங்களைப் போன்றவர்களின் தூண்டலால், கவிஞர் கந்தர்வன் நூலகத்திற்கு சிறுதுளி பெருவெள்ளமாய் நூல்கள் சேரும். அவற்றை பகுத்தமைக்க நிலைப்பேழைகளும் அய்யா சண்முக பழனியப்பன் போன்றவர்களால் கிடைக்கக் கூடும். முழுநேரப் பணியாளராக கவிவர்மன் போன்ற ஆற்றல்மிக்க இளைஞர் ஒருவரை அமர்த்தி, வருகையாளர், நுகர்வோர், வழங்கல், நூற்பட்டியல் பதிவேடுகள் வைத்து, எளிமையாக வாசிப்போர் பயனடையத் தக்க நிலையினை உருவாக்க வேண்டும். அதற்கான முனைப்பில் எனது பங்களிப்பும் உண்டு. தொடரட்டுமே தொண்டு... தொண்டில் துளிர்க்கட்டும் பல்லாண்டு.

    பதிலளிநீக்கு
  5. நன்றி நண்பர்களே, நன்றி.
    தூண்டும் உங்கள் சொற்களால்,
    துவளாது நமது பணி தொடரும்.
    நீங்களும் நமது நண்பர்களிடம் கேட்டு நூல்களை நூலகத்திற்கும், நல்ல ஆள்களை செயல்படவும் தாருங்கள்.
    அன்புடன்,
    நா.மு.

    பதிலளிநீக்கு