“கரிசல்குயில்” கிருஷ்ணசாமியின் மகள் திருமணத்திற்குச் சென்று வந்தேன்...


தமுஎகச விருதுநகர் மாநில மாநாட்டில், வெள்ளைச் சட்டையோடு கண்ணாடி போட்டு மைக் எதிரில் நின்று பாடும் கரிசல் கிருஷ்ணசாமி தலைமையில் எழுச்சிகீதம் இசைக்கும் கலைஞர்கள்
(பின்னால் கை உயர்த்தி பூபாளம் பிரகதீஷ்,  கரிசல் அருகில் கருணாநிதி,  கருப்புச் சட்டையில் சோழ.நாகராஜன், அந்தப் பக்கம் ஓவியர் வெண்புறா,   மேடைமுனையில் எழுத்தாளர் சங்க மாநிலத்தலைவர் ச.தமிழ்ச்செல்வன் உள்ளிட்ட தலைவர்கள்)
”தோழர்களே! தோழர்களே தூக்கம் நமக்கிலை வாருங்கள்!
தோளை நிமிர்த்தி வாளைச் சுழற்றி தொய்வில்லா நடை போடுங்கள்”
-------------------------------------------------------------- 
இரண்டு மூன்று மாதம் முன்பே கிருஷ்ணசாமியிடமிருந்து உரிமையுடன் கூடிய அழைப்பு -
“ஏய்... நிலவு. நமம வீட்டுல பொண்ணு கல்யாணம்லே... இப்பவே சொல்லிட்டேன்.. நா அங்க போனேன் இங்க போனேன் வரமுடியலங்கிற பேச்சே இருக்கக் கூடாதுங்கறதுக்காகத்தான் இப்பவே சொல்லுதேன்... நீயும் மதுக்கூரும் கலந்துக்கிற பட்டிமன்றம், நடுவர் நம்ம நந்தன் (நந்தலாலவை அப்படித்தான் நெருங்கிய நண்பர்கள் கூப்பிடுவோம்) அவிங்ககிட்டயும் சொலலிட்டேன்பா.. நீயும் குறிச்சி வச்சிக்க.. வந்துறணும்யா சொல்லிட்டேன்..” எனும் குரலை மறுக்க முடியுமா என்ன?
அந்த தினம் பார்த்து, எங்கள் மூவருக்கும் ஐந்தாறு நிகழ்ச்சி அழைப்பு (திண்டுக்கல் திரு.லியோனி உட்பட) எல்லாவற்றையும் அன்போடு மறுத்து “கரிசல் மகள் கல்யாணத்துக்குப் போறேன்“ என்று கூறிவிட்டு எங்கள் வீட்டுக் கல்யாணத்தில் இருந்தது போல நடந்த நிக்ழ்வு மகிழ்வும் நெகிழ்வும் கலந்து நெடுநாள்களுக்கு மறக்க முடியாததாய் அமைந்துவிட்டது.

தமிழ்நாட்டின் நிஜநாடகத்தின் நிஜமான முகமாகத் திகழும் பிரளயன், கூத்துக் கலையின் அடையாளமாகத் திகழும் பாவல் ஓம் முத்துமாரி, பட்டிமன்றம் பேச எங்கள் மூவரோடு எழுத்தாளர் சாத்தூர் லட்சுமணப் பெருமாள், திரைமுயற்சியில் ஜெயிக்கும் முயற்சியில் இருக்கும் கவிஞர் தனிக்கொடி, முதல் நாள் கலைநிகழ்ச்சிகளுக்குத் தலைமையேற்கத் தேனி வசந்தன்,, பாடல்கள்  பாட கரிசல் -வாரிசுகள்- கருணாநிதி, திருவுடையான், உடுமலை துரையரசன், ரேவதி, 
கவிதை பாட நவகவி, வையம்பட்டி முத்துச்சாமி திரைத்தமிழில் முத்திரை பதித்துவரும் “பூ“ராமு, எழுத்தாளர்கள் கே.வேலாயுதம், உதய சங்கர், ஷாஜகான்,அப்பணசாமி (குடும்பத்துடன்) வெண்புறா(தமிழ்நாட்டின் முக்கியமான கலைஇரவு மேடைகள் எல்லாம் உயிர்பெற்று நிற்கக் காரணமான கைகள் கரிசல் மகளின் திருமணத்திற்கும் மேடை அலங்காரம் செய்ய, துணைவியார் கரிசல் மகளுக்கு அலங்காரம் செய்தார்), எழுத்தாளர்கள் வேல.ராமமூர்த்தி, மணிமாறன், சாந்தாராம், உணர்ச்சிக் கவிஞன் லட்சுமிகாந்தன் என கலைஇலக்கியப் பெரும் படையை மேடையில் மட்டுமல்ல போய் இறங்கிய உடனே எதிர்நின்று வரவேற்றார் -கரிசல் குயிலின் அண்ணன் சு.துர்க்கையப்பன்.. கசங்கிய சட்டை வேட்டியோடும் செருப்பில்லாத வெறும் கால்களோடும் தனக்கே உரிய உயிர்ச்சிரிப்புடனும்,  கரிசல் வந்து கட்டிப்பிடித்து வரவேற்றதில் எங்கள் பயணக் களைப்பு பறந்தே போனது! 

அழைப்பிதழில் தன்பெயரையும் படத்தையுமே பெரிதாகப் போட்டுக்கொள்ளும் உலகில் “அண்ணன் அண்ணி இருவரின் நல்லாசிகளுடன்“ என்று மட்டும் போட்டிருக்கும் கரிசலின் பண்பை என்னவென்று சொல்ல? அந்த அண்ணனும் சாதாரணப்பட்டவரல்ல... பி.ஈஆனர்ஸ், படித்து, இத்தாலி நாட்டி்ல் பெரியஅளவில் பணியாற்றிவந்தும் அவ்வளவு அடக்கமாக, எல்லாரையும் ஓடிஓடி உபசரித்துக்கொண்டிருந்தார்.  இன்னொரு அண்ணன்-அண்ணி முன்னிலை வகித்தார்கள்! 
அபூர்வ சகோதரர்கள்தான் என்று அதுவும் பார்க்க மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது.

அடுத்தநாள் நிகழ்வில் செம்மலர் ஆசிரியர் எஸ்.ஏ.பி., தமுஎகச தலைவர் ச.தமிழ்ச்செல்வன் வந்திருந்தனர். (அழைப்பிதழில் பெயர்போட்டிருந்ததில், பொதுச்செயலர் சு.வெங்கடேசன், பேச்சாளர் பாரதி கிருஷணகுமார் இருவரும் வரவில்லை) நரிக்குளம் என்னும் ராஜபாளையத்திலிருந்து 15கி.மீ.உள்ளே கிடக்கும் அந்த ஊருக்குத் தமிழ்நாட்டின் முக்கியமான கலைஇலக்கிய ஆளுமைகள் வந்திருந்தது அந்த மக்களுக்கும் நமது மகததான் கலைஞன் கரிசல் கிருஷ்ணசாமிக்கும் செய்த மரியாதையாகவே பட்டது.

மணமகள்- கி.துர்கா பிஈ, 
பெற்றோர்- சு.கிருஷ்ணசாமி, கி.முத்துலட்சுமி. 
மணமகன் -ந.சுகுமாறன் பிஎஸ்ஸி பிஜிடி. 
பெற்றோர் கி.நவநீதன்,ந.பாக்கியலட்சுமி  
மணநிகழிடம் - நரிக்குளம், ராபாளையம் அருகில் 
மணநாள் - 12-05-2013 
நாங்கள் போயிருந்தது முந்தின நாள் மாலை  
கலை-இலக்கிய நிகழ்வுகள் இரவு 1மணிவரை.

இது கரிசல்குயில் வீட்டில் நடந்த தமுஎகச திருவிழா என்றுதான் சொல்ல வேண்டும்.

தற்போது ஆலமரமாய் வேர்பிடித்து தழைத்து கிளைத்து வளர்நது விழுதுவிட்டும் நிற்கும் தமுஎச (தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம்) எனும் தமிழகத்தின் மிகப்பெரும் கலைஇலக்கிய அமைப்பின் வளர்ச்சிக்குத் தன் வியர்வையையே நீராகப் பாய்ச்சிய ஒரு சில மகத்தான கலைஞர்களில், நமது “கரிசல் குயில்கிருஷ்ண சாமிக்கு மிகப்பெரும் பங்கு உண்டு.

தனது எழுச்சியூட்டும் குரலால், நமது காதுகளைத் தொட்டு, நெஞ்சுக்குள் ஊடுருவிச் செல்லும் அந்தக் குயிலின் குரலால் மயங்காதவர் யாருண்டு?

இலைகள் அழுத ஒரு மழைஇரவு
எலும்பும் உறைந்துவிடும் குளிர்பொழுது

கண்டேன் ஒரு காட்சி கண்டெனது
கண்ணில் இறங்கிவரும் நீர்விழுது” 
எனும் அனாதைக் குழந்தைகள் பற்றிய நமது கவி நவகவியின் உயிர்த்துடிப்பான வரிகளை தானே இசையமைத்துப் பாடும் அவனது வசீகரக் குரலில், அடுத்தடுத்த வரிகளில் ஆழ்ந்து கிடந்த நாள்கள் பல

. அதில் வரும்-
கூட்டுக் குருவிகளின் சூட்டுக் கதகதப்பில்
குஞ்சுக் குழந்தைகளும் தூங்கும் – இந்த
நாட்டுப் பாதைகளில வாட்டும் வாடைகளில்
அனாதைக் குழந்தைகள் ஏங்கும்.

சாலை மைல்கல் சாயம் மங்கியதும்
வர்ணம் தீட்டுவார் இங்கே – இந்த
ஏழைப் பூக்களை மையிட்டுப பொட்டிட்டு
சிங்காரம் செய்பவர்தான் எங்கே? 
சிங்காரம் செய்பவர்தான் எங்கே?
       எனும வரிகளைக் கேட்கும் போது தொடங்கும் அழுகையை பாட்டுக் கேட்டு வெகுநேரம் வரை நிறுத்தவே முடியாது என்பது எனது அனுபவம். 

அதற்குக் காரணம் நவகவியின் வரிகளில் உள்ள உயிர் என்பது பாதி என்றால், அதற்குப் பொருத்தமான இசையில் தன் குரலை வேண்டிய இடஙகளில் குழைத்தும், கூர்மைப் படுத்தியும் நம் நெஞ்சுக்குள் ஊடுருவும் கிருஷ்ணசாமியின் குரல் பாதி எனபதை யார் மறுக்க முடியும். – 
அதிலும் “வர்ணம் தீட்டுவார் இங்கேஏஏஏஏ” என்று கிருஷ்ணசாமி நம் உயிரையே சுண்டி இழுக்கும் குரலில் கேட்கும்போது, நம் ஈரக்குலை யெல்லாம் நடுநடுங்கி உடம்பெல்லாம் புல்லரித்துப் போகும். இப்போதும் -எப்போது அந்தப் பாடலைக் கரிசல் குரலில் கேட்டாலும்- இதை நான் உணர்கிறேன்.


              “தனி ஒருவனுக்கு உணவிலை எனில் ஜகத்தினை அழித்திடுவோம்“- என பாரதி கேட்ட கேள்வியை வேறொரு கோணத்தில் நமது மகத்தான கவிஞன் நவகவி கேட்டிருக்கிறான் எனில் அதற்கு உயிர்கொடுத்து, நம்மை எழுச்சியுடன் சிந்திக்கவும் –அனாதைக் குழந்தைகள் மேல் நம் அன்பைத் திருப்பவும் செய்துவிட்டான் நம் மகத்தான கலைஞன் கிருஷ்ணசாமி என்று நான் பலநேரம் நினைத்துக்கொள்வதுண்டு.

எனவேதான் --
வேறு வேறு தருணங்களில் இந்த இருவரும் -மகா கவிஞனும் மகா கலைஞனும் ஆகிய நவகவியும், கிருஷ்ணசாமியும்- ஏதோ சில காரணங்களாலும் த்த்தம் உடல் நலக்குறைவாலும் வீட்டுக்குள் முடங்கிக் கிடந்தபோது, இந்தப் பாடலைத்தான் உதாரணமாகச் சொல்லி இருவருக்குமே நான் கடிதம்  எழுதியிருந்தேன்.

இந்தப்பாடல் இடதுசாரி மக்கள் இசைக்கு இந்த இருவரின் மகத்தான கொடை.
கண்ணதாசனின் “அச்சம் என்பது மடமையடா“ பாடலின் முக்கியத்துவத்தை அண்ணா உணர்ந்தது போல நம் தலைவர்கள் இந்தப் பாடலின் உயிர்ப்பான தேவையை உணர்ந்திருந்தால் மக்களுக்கான பணியில் இன்னும் பயன் கூடியிருக்கும் என்பது எனது தாழ்மையான கருத்து..

இந்தப் பாடலைத் தந்தவர்கள் எந்தக் காரணம் கொண்டும் முடங்கிக் கிடக்கக் கூடாது. சாதாரண மனிதர்களே தத்தம் தனிப்பட்ட பிரச்சினைகளை நீந்திக் கடந்து வாழ்ந்துவரும்போது, இத்தகைய மகத்தான கலைஞர்கள் முடங்கிக் கிடக்க அனுமதியில்லை. எழுதோழா. உன் வரிகளில் தெறிக்கும் சத்திய ஆவேசம் நம் மண்ணைப் பற்றிப் படர வேண்டும் என்று இருவருக்கும் –சுமார் 15ஆண்டுகளுக்கும் முன்பே- எழுதியது நினைவிருக்கிறது. அதன் பின் அந்த இருவருமே என் கடிதம் சரியான தருணத்தில் மனப்புண்ணுக்கு மருந்தாக இருந்ததாகத் தெரிவித்ததும் எனது கடிதத்தைப் பத்திரமாக வைத்திருப்பதாகவும் தெரிவித்ததும் நன்றாக நினைவிருக்கிறது.

அந்த எதார்த்தம் இன்னும் –இத்தனை ஆண்டுகள் கழிந்தும் – மாறிவிடவில்லை என்பதைக் கிருஷ்ணசாமியின் மகள் திருமணத்திற்கு முந்திய நாள் நடந்த இனிய நிகழ்வில் நடந்த பேச்சு உண்மையாக்கியது.

தன் உயிர்கலந்த பாடல்கள் பலவற்றுக்கு உடலான வரிகளைக் கொடுத்த கவிஞர்கள் நவகவியையும், வையம் பட்டி முத்துச்சாமியையும், பரிணாமனையும் கௌரவிக்கும் நோக்கத்தில் மேடைக்கு அழைத்தான் கிருஷ்ணசாமி. பரிணாமன் உடலநலக் குறைவால் வரவில்லை. மேடையேறிய கவிகள் இருவரும் தானும் இயல்பு மாறாத இடதுசாரி மக்கள் தொண்டர்கள் தான் எனும் நினைப்பு மாறாதவர்களாய். “ எங்கள் பாடல் வரிகளைத் தமிழ்நாடு முழுவதும் கொண்டுசென்று, எங்களை மக்களுக்கு அறிமுகப் படுத்திய மகத்தான கலைஞன் கரிசல் கிருஷ்ணசாமிக்குப் பெரிதும் கடமைப் பட்டிருக்கிறோம்என்ற அடக்கமான சொற்கள் அவர்கள் உண்மையான கலைஞர்கள் என்பதை உறுதிப்படுத்தியது. “பணியுமாம் என்றும் பெருமை, சிறுமை அணியுமாம் தன்னை வியந்து”  என்ற வள்ளுவனின் வார்த்தைகளில்தான் எவ்வளவு உண்மையிருக்கிறது என்பதை அந்த்த் தருணங்களில் நான் உணர்ந்தேன்.

அதுவும் கிருஷ்ணசாமி, தன் மகளின் திருமண அழைப்பிலேயே, “என் அண்ணன் மற்றும் அண்ணியாரின் ஆசிகளுடன்எனும் வார்த்தைகளோடு, அவர்கள் படத்தை மட்டுமே அச்சிட்டு, தன்னை முன்னிறுத்திக் கொள்ளாத அடக்கம் என்போன்ற பலரை வெட்கப்படவும் இப்படியல்லவா உயர்ந்த உள்ளங்கள் இருக்கின்றன என்று சிந்திக்கவும் வைத்த உண்மையை வெட்கப்படாமல் ஒப்புக்கொள்ளும் போதுதான் நானும் மனிதனாவதாக உணர்கிறேன்.

“ஒன்றுமே செய்யாமல் நாம் நம்மைப் பற்றிய பிம்பத்தை எப்படிப் மிகப்பெரிதாக நமக்குள் வளர்த்துக் கொண்டிருக்கிறோம்! இவர்களல்லவா மக்கள் தொண்டர்கள், இவர்களல்லவா உண்மையான மக்கள் கலைஞர்கள்” என்று நான் நெஞ்சுக்குள் நெகிழ்நது போனேன். ஒருவரை ஒருவர் மிஞ்சும் அடக்கம், அடுத்தவருக்குத் தெரியாமல் போட்டிபோட்டுத் தன்பணியை உணர்ந்து தொடரும் கடமை, நமக்கு எழுதி, பாடி மட்டுமல்ல சிலவற்றைச் சொல்லாமலே செய்தும் காட்டுகிறார்கள் இந்த மக்கள் கலைஞர்கள் என்பதுமட்டும் எனக்கு உறைத்த்து.

திடீரென்று இரவு 10மணிக்கு மேல், என் அலைபேசி ஒலிக்கும். எடுத்தால், “என்ன நிலவு தூங்கிட்டியா?” என்று கிருஷ்ணசாமி குரல் கேட்கும்.  புதுசாக் கிடைச்ச ஒரு நல்ல பாட்டுக்கு ட்யூன் போட்டிருக்கேன் கேக்குறியா? என்பான். “உன் குரலைக் கேட்கத் தமிழ்நாடே காத்துக்கிடக்கு, எனக்காகப் பாடுறேன்கிறே?... கேக்கக் கசக்குமா பாடப்பா” என்று நான் சொல்வேன்.. அடுத்த அரைமணிநேரம்... அவன் காசு வீணாகிறதே என்று, “இரு நெட் கிடைக்கல நான் கூப்புடுறேன்“ என்று பொய்சொல்லிவிட்டு நான் அழைப்பேன். மீண்டும் ஒரு அரைமணிநேரம் நான் இசை மழையில் நனைவேன்.
இப்படித்தான் ஒருநாள் இரவு,“நிலவூ...உங்க புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடிப் புலவர் சுந்தரபாரதியின் பாடல் தொகுப்பு ஒன்னு கிடைச்சுது அதுல என்ன அருமையான பாட்டுகளய்யா! நீ தான் அதுக்கு முன்னுரை எழுதியிருக்க... இது போல தாராபாரதி பாட்டுகள்ளாம் ரொம்ப நல்லா இருக்குன்னு சொல்லுதாக! அவரு பாடல் தொகுப்பு எனக்கு வேணுமே! என்றான். என்னிடமிருந்த அந்தத் தொகுப்பை அடுத்த நாளே அனுப்பி வைத்தேன்... இதுபோலும் சம்பவங்கள் நிறைய...

1970களின் இறுதியில், புதுக்கோட்டையில் நான் தமுஎசவைத் தொடங்கியபோது, என் உழைப்பால் மட்டுமல்ல, தோழர்களின் ஈடுபாட்டால் மட்டுமல்ல, வீட்டில் நடந்த மாதக்கூட்டங்கள் பலவற்றிலும் அப்போதிருந்த வறுமைக்கும் அஞ்சாமல் அக்கம்பக்கத்தில் கடன் வாங்கியாவது, சலைக்காமல், டீ போட்டுக்கொடுத்து, சூடாக வடையும் தந்த என் மனைவி அபிராமியின் அன்பு கலந்து வார்த்தையிலும்தான் புதுக்கோட்டை நகரத் தமுஎச கொஞ்சம் கொஞ்சமாக மாவட்டம் முழுவதும் 16 கிளைகளாகப் பரவியது.

1982இல், பாரதி நூற்றாண்டு விழாவை – எனது சக்தியை மீறிய பெரிய விழாவாக புதுக்கோட்டை நகரத்தில் நடத்த திட்டமிட்டேன். மாவட்டக் கிளை அப்போது கிடையாது. ஆனாலும், அன்றைய தலைவர் கே.முத்தையா, அ.மார்க்ஸ், எனது கல்லூரி முதல்வரும் தநாகஇபெம தஞ்சை மாவட்ட நிர்வாகிகளில் ஒருவருமான பாரதிப்பித்தன், ஆகியோரை அழைத்து, சிறப்பாக நடத்தினேன். பின்னர் அந்த விழா தந்த உற்சாகத்திலும், 1984இல் புதுக்கோட்டை வந்து சேர்ந்த கந்தர்வன் தந்த உற்சாகத்திலும் மாவட்டம் முழுவதும் 15க்கும் மேற்பட்ட கிளை செயல்படத் துவங்கியது. அதற்கு, இப்போது பாரதி கிருஷண் குமார் எனப்படும் அப்போதைய எழுச்சிப் பேச்சாளர் பா.கிருஷ்ண குமாரின் உரைவீச்சு ஒருபுறமும், இப்போது தமிழ்வளர்ச்சித் துறையின் இயக்குநராக இருந்த கே.ஏ.குணசேகரனின் எழுச்சிப் பாடல்கள் ஒருபுறமும், இப்போதைய செம்மலர் ஆசிரியர் எஸ்.ஏ.பெருமாளின் மனிதகுல வரலாறு வகுப்பும், இப்போது தமுஎகசவில் இல்லாத அஸ்வகோஷின் சிறுகதை பற்றிய வகுப்புகளும், நெல்லை தமுஎசவின் “சிருஷ்டிகலைக்குழுவின் நாடகங்களும், எவ்வளவு உதவினவோ அவ்வளவுக்குப் பேருதவியாக இருந்தது அப்போதுதான் அமைக்கப்பட்ட கரிசல் கிருஷ்ணசாமி-மற்றும் அப்போது வங்கியில் பணியாற்றிக்கொண்டே கிருஷ்ணசாமியோடு இணைந்து பாடிவந்த தோழர் சந்திரசேகரனின் பாடல் வழி வந்து பற்றிப் பரவிய நெருப்பு இன்றும் -30ஆண்டுக்கும் மேலாக- தொடர்ந்து எரிந்து வருகிறது. சிருஷ்டி கலைக்குழுவில் அப்போது நடித்து வந்த உதயசங்கர், அப்பணசாமி இப்போது பெரிய எழுத்தாளர்களாகி விட்டார்கள்... பலரும் தன் இருப்பில் சிறந்த ஆளுமைகளாக வளர்ந்திருக்கிறார்கள்...

”தோழர்களே தோழர்களே தூக்கம் நமக்கிலை வாருங்கள்,
தோளை நிமிர்த்தி வாளைச் சுழற்றி தொய்வில்லா நடைபோடுங்கள்

பச்சைக் குழந்தை பாலின்றி பாதையில் விழுவது அகிம்சையாஃ

பசிக்கு ரத்தம் குடிக்கும் பேய்களை போருக்கு இழுப்பது அதர்மமா,
அச்சமிலலாத நெஞ்சங்கள் ஆடிப்புனலுக்கு அஞ்சிடுமா?
துச்சம் உயிரெனும் கொள்கையிலே தூக்கிய கரங்கள் கீழ்வருமா?” 
-என்று-
மதுரையில் ஒரு தமுஎச பயிற்சி முகாமின் இறுதியில் கரிசல் பாடிய பாடல் வரிகளின் நெருப்பு இன்னும் பல்லாயிரம் தோழர்களின் நெஞ்சில் பற்றி எரிந்துகொண்டுதானே இருக்கிறது! அந்த ஆவேசம் பலப்பல ஆண்டுகள் கழிந்தும் கடந்த விருதுநகர் மாநாட்டின் போதும் மாநாட்டின் நிறைவுக்குப்பின் கிருஷ்ணசாமி பாடிய பாடலில் தெறிப்பதை மேலுள்ள படத்தைப் பார்ப்பவர்கள இப்போதும் புரிந்துகொள்ள முடியும். அந்தக் குரல் தந்த ஆவேசம் இன்னும் எத்தனை தோழர்களை உசுப்பிவிட்டுக்கொண்டு இருக்கிறது! அந்தக் குரல் தொடர்ந்து தமிழ்நாடு முழுவதும் ஒலிக்க வேண்டும். ஒலிக்கும் அதன் எதிரொலியும் ஆங்காங்கே கிடைக்கும். அதுதானே கலையின் வெற்றி! 

இதுபோல ஒவ்வொரு மாவட்டத்திலும் தமுஎச வளர்ந்த வராற்றை எழுதினால், அதில் கரிசல் குயில் கிருஷ்ணசாமி எனும் சுயஎதிர்ப்பார்ப்புகள் ஏதும் இல்லாத மாமனிதனின், கணீர்க்குரலின் பங்களிப்பின தொகு்ப்பை எழுதலாம். .... 
திருமணவிழாப் படங்கள்  பிற நிகழ்வுகள் பற்றிய தகவல்கள் வந்தபிறகு இந்தப் பக்கத்தில் மேலும் எழுதலாம்... 
அதுவரை உங்கள் கருத்தறிய ஆவல்... 
தோழர்களே தோழர்களே தூக்கம் நமக்கிலை வாருங்கள்,
அன்புடன் - நா.முத்துநிலவன்.
அலைபேசி - 94431 93293
------------------------------------------------ 

6 கருத்துகள்:

  1. ஒரு மழைநாளில் உங்கள் வீட்டில் டீயும் சூடான வடையும் சாப்பிட்டபடி, த.மு.எ.ச.வளர்ந்த வரலாற்றை உரிய பின்னணி இசையுடன் கேட்க வேண்டும் போல ஆசை ஏற்படுகிறது.....

    பதிலளிநீக்கு
  2. கரிசல் குயில் இல்லத் திருமண நிகழ்வோடு த.மு.எ.ச.வின் வளர்ச்சி பரிணாமத்தையும் மிக இயல்பாக, நேரில் காணொளிக் காட்சியில் காண்பது போல நிரல்பட விவரித்திருக்கும் நேர்த்தி... படிப்பவரைப் பாத்திரமாக்கும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. கண்ணுக்கும் காதிற்கும் விருந்தளித்தவர் இல்லத்தில் வயிற்றுக்களித்த விருந்தில் குறைவு பட்டா இருக்கும்? பதிவில்லையெனிலும் அனுமானத்தில் அருமையான விருந்தின் சுவையுணர்ந்தேன்... பாவலர் பொன்.க.

    பதிலளிநீக்கு
  3. நன்றி திரு செல்லப்பா,
    நன்றி பாவலர் பொன்.க, தொலைபேசியில் பேசிய கருவூலத்துறை மாவட்ட உதவி அலுவலராக இன்று உயர்ந்திருக்கும் திரு கணேஷ், அன்று சாதாரண எழுத்தராக இருந்தபோது, கரிசல் இசையில மயங்கிக் கிடந்ததையெல்லாம் சொல்லிச் சொல்லி நெகிழ்ந்து போனார்.
    இதே போல ஆலங்குடி அறிவொளி கருப்பையா (ஓவியர்) நெகிழ்ந்து சொன்ன சொற்கள்... இவைதான் கிருஷ்ணசாமியின் பெரும் சொத்து... வேறென்ன சொல்ல?
    நன்றி நண்பர்களே! (இந்த ஈரத்தில்தான் நம் உலகம் இயங்குகிறது)
    அன்புடன்,
    நா.முத்துநிலவன்

    பதிலளிநீக்கு
  4. ஒரு திருமண நிகழ்வை இப்படியெல்லாம் பதிவிட முடியுமா? அசந்துதான் போனேன். "கலைப் பயணம்" என்று தமிழ்நாட்டில் பலரும் சொல்வதுண்டு. ஆனால் உண்மையான கலைப் பயணத்தைத் தமிழ்நாட்டில் த.மு.எ.க.ச மட்டுமே தொடர்ந்து நிகழ்த்துவதாய் நான் கூறுவேன். கிருஷ்ணசாமியின் பேச்சு நடையை அப்படியே பதிவிட்டுள்ளீர்கள். உங்கள் மூலமாக அவருக்கு என் வாழ்த்துகள் !

    பதிலளிநீக்கு
  5. முகநூலில் கருத்துச் சொன்னவர்களுக்கு நன்றி
    - Ganesan Palanisamy, Venpura Saravanan, Thuckalay Haleema and 2 others like this.

    Thuckalay Haleema Muthu sir your articlle about Karisal Krishnasamy taken me to twenty five years back. When my daughters were little girls I used to sing Ilaikal Alutha oru mazhai iravu during two and half decades back . This is very routine daily whether night or day it was. Your article really a tribute to a legand.
    May 13 at 6:32pm · Like

    Kumar Venkatraman ஏதோ திருமண நிகழ்வுதானே! என்று சாதாரணமாக படிக்க ஆரம்பித்தேன்..த மு எ க ச வின் வரலாறு படித்தது போல் உணர்ந்தேன்..அருமை..
    May 13 at 9:46pm · Like

    Muthu Nilavan நண்பர்கள் தக்கலை, குமார் வெங்கட்ராமன் இருவருக்கும் நன்றிகள்.
    May 28 at 12:19am · Like

    Muthu Nilavan கரிசல் கிருஷ்ணசாமியின் வரலாறும், தமுஎச வரலாறும் ஒன்றாகவே எழுதப்படும். அவன் மகா கலைஞன் மட்டுமல்ல மாமனிதன். அதுதான் திட்டமிடப்படாமலே அந்தக் கட்டுரை உணர்வு பூர்வமாக வந்துவிட்டது.

    பதிலளிநீக்கு
  6. indraikkum soorvu erpattal karisalin pattu manathai varudum urchakam kodukkum antha samuka kalagnanin illa nihalvil kalanthu ungal samuka kadaimaiyai aatriyatharkku paarattukkal
    M.Soundarrajan President THA.MU.EA.KA.SA Tiruvarur

    பதிலளிநீக்கு