கோடை விடுமுறை தேவையில்லையா?!

-நா.முத்து நிலவன்-
ங்கிலேயர் ஆரம்பித்ததுதான், ஆனாலும் நமது “பள்ளிகளுக்கான கோடை விடுமுறை“ என்பது நமது மண்சார்ந்த வகையில் -பள்ளிமாணவர் உளவியலும் உடல்நிலையும் சார்ந்த வகையில்- சரியானது தானே? அப்புறம் ஏன் தமிழகத்தின் ஆயிரக்கணக்கான தனியார் பள்ளிகளில் படிக்கும் லட்சக்கணக்கான நம் பிள்ளைகளுக்கு மட்டும் கோடை விடுமுறை மறுக்கப்படுகிறது?
தனியார் பள்ளி விடுதிகளில் தங்கிப் படிக்கும் நமது தமிழகப் பிள்ளைகளில்  9,11ஆம் வகுப்புப் பிள்ளைகள் மட்டும் அவர்களின் ஆண்டு இறுதித்தேர்வு முடிந்ததும், “அம்மா... இந்த வருசம் சம்மர் லீவே இல்லையாம்மா...எனப் பேசுவதும், இந்த விடயம் முன்னரே தெரிந்த பெற்றோர் “ஆமாடா கண்ணு. அடுத்த வருசம் நீ பப்ளிக் எக்ஸாம் எழுதப்போறயில்ல..? கொஞ்சம் கஷ்டப்பட்டுப படிச்சுறுப்பா... உன்ன அடுத்த வாரம் அப்பாவோட பாக்க வர்ரேன்”....  என்று தொலைபேசியில் கெஞ்சுவது இப்போது நடந்து வருகிறது.
ஏன் இப்படி?
குழந்தைகள் “ஓடி விளையாடு பாப்பா”  பாடலை ஓர் அறைக்குள் உட்கார்ந்து மனப்பாடம் செய்வதற்கா பாரதி எழுதினான்? இது தகுமா? இது சரியா?  நியாயம்தானா?

பள்ளிகளுக்கான பாடத்திட்டத்தை வகுத்தவர்கள்- ஒருநாளைக்கு இவ்வளவு நேரம் பாடம் நடக்க வேண்டும், விளையாட்டு, கலைவகுப்புகள் நடக்க வேண்டும் எனத் திட்டமிட்டுத் தந்தவர்கள் - என்ன முட்டாள்களா? அறிவியல் ரீதியாக அவர்கள் சொன்னதை மீறி, சிறப்பு வகுப்பு நடத்துவதே மாணவர் உளவியலுக்கு எதிரானது. குதிரை கீழேதள்ளி குழியும் பறித்த கதையாக,  கோடை விடுமுறையையே மறுத்துத் வகுப்புகள் நடத்துவதுகுழந்தைகள் மீது நடத்தும் வன்முறைஅல்லவா? 

யார் இதைக் கேட்பது? பல்லாயிரக் கணக்கான குழந்தைகள், லட்சக் கணக்கிலான பெற்றோர் சார்பில் தமிழக அரசுதான் தலையிட்டுக் கேட்க வேண்டும்! உடனே இதைத் தடுத்து நிறுத்தவும் வேண்டும்.

ங்கள் தாத்தா தன்காலத்துப் பெருமைகளைச் சொல்லும்போது "அந்தக் காலத்துலயே நான் ரெண்டாம்ப்புலருந்து 'டபுள்-ப்ரமோஷன்' வாங்கி நேரா நாலாம்ப்புக்குப் போனவன்டா! அதுமட்டுமில்ல, மூணுவருச பி.ஏ.,டிகிரிய ஒரேவருசத்துல முடிச்சு 'ஹானர்ஸ்' வாங்குனவன் தெரியுமில்ல?" என்று தனது வெள்ளை மீசையை நீவி விட்டுக்கொண்டே வீறாப்பாகச் சொல்வார்.
அதுபற்றி அப்போது எனக்கு ஆச்சரியமாக இருந்தாலும், வேறு ஒன்றும் கேட்டதில்லை. ஆனால். இப்போது நமது பிள்ளைகள் --9,11ஆம் வகுப்புகளில் படிப்பதாகச் சொல்லும் குழந்தைகள்-- அந்த வகுப்புப் பாடங்களையே படிக்காமல் அப்படியே முறையே 10, 12 வகுப்புப் பாடங்களையே இரண்டுவருடம் படிப்பதைப் பார்த்ததும் எனக்குத் தாத்தாவின் நினைவுதான் வந்தது! இந்த 'டபுள் ப்ரமோஷன்' ஏன்?  இது நமது குழந்தைகளுக்குச் சரியானதுதானா?   இது ஊரறிந்த ரகசியமாகப் பல்லாண்டுகளாகத் தொடர்வது ஏன்?
தமிழ்நாட்டின் அனைத்து மெட்ரிக்-பள்ளிகளிலும், பெரும்பாலான தனியார் பள்ளிகளிலும் 9,11ஆம் வகுப்புகளை  நடத்தும் வழக்கமே இல்லை! இந்த வியாதி –பலபள்ளி மாணவரும் ஒரே ஆசிரியரிடம் தனிப்பயிற்சி படிப்பதால் தொற்றிக்கொள்ளும் வியாதி- இப்போது அரசுப் பள்ளிகளுக்கும் விடம்போலப் பரவி, குறைந்தது அரையாண்டுக்குப் பிறகாவது அடுத்தவருடப் பாடத்தைத் தொடங்கிவிடுவது என்னும் கைங்கரியம் நடந்துகொண்டுதான் இருக்கிறது. ஆக, அரசுப்பள்ளிகளில் 9,11ஆம் வகுப்புகளுக்கு அரைப்படிப்புத்தான்! மெட்ரிக், தனியார் பள்ளிகளில் அதுவும் இல்லைபோ என்னும் நிலைமை! ஏன் இப்படி?

மெட்ரிக் மற்றும் தனியார் பள்ளிகள் பலவற்றில், எட்டாம் வகுப்பு ஆண்டுத்தேர்வில் வெற்றி பெற்ற மாணவ-மாணவியர், 9ஆம் வகுப்பில் சேர்ந்தவுடனேயே, 10ஆம் வகுப்புப் பாடப்புத்தகங்களும் சேர்த்துத் தரப்படுகின்றன. தரப்படுவது என்ன, 'மெட்ரிக்குலேஷன்' பள்ளிகளில்-ஆங்கில வழியில் -படிக்கும் மாணவர்கள் 9,10ஆம் வகுப்புப் பாடநூல்கள் இரண்டையும் ஒரே நேரத்தில் வாங்கிவிட வேண்டும்! 'மெட்ரிக்குலேஷன்' பள்ளிகளில்தான் வெளியில் புத்தகங்களை வாங்க முடியாதே! வாங்கவும் கூடாதில்ல? அப்படி வாங்கிய 9ஆம் வகுப்புப் பாடப்புத்தகங்கள் சில, ஒரு சில வாரங்களே நடத்தப்படும்! 'பெருந்தன்மை'யான சில பள்ளிகளில் காலாண்டு வரை நடப்பதுண்டு! அதற்குமேல் நிச்சயமாக 10ஆம் வகுப்புப் பாடங்கள் துவங்கி விடும்! அதிலிருந்து அந்த மாணவர்கள் 10-ஆம்வகுப்புப் பாடங்களையே இருமுறை -அதாவது சுமார் ஒன்னே முக்கால் ஆண்டுகளும் படிக்கிறார்கள்! (அப்படின்னா, +2 படிப்பு இரண்டு வருடம் மாதிரி,  பத்தாம் வகுப்பும் ரெண்டுவருடம் தானோ? என்மகன் பி.ஏசெகண்ட் இயர் படிக்கிறான்னு சொல்லிக்கிற மாதிரி என் மகள் டென்த் செகண்ட் இயர் படிக்கிறான்னு பெருமையா சொல்லிக்கலாம் ஆனா யாரும் சொல்லிக்கிறதில்லயே! ஏன்னா தன் மகன்ஃமகள் “நல்ல“ பள்ளியில் படிக்கும் ரகசியத்தைக் காப்பாற்ற வேண்டுமல்லவா?)
இதே கதை(கதி)தான் 11ஆம்வகுப்பு (+1) மாணவ-மாணவிகளுக்கும்! இதில் கூத்து என்னவென்றால், மெட்ரிக்குலேஷன் பள்ளிகளைப் போலவே  பெரும்பான்மையான அரசு மேல்நிலைப்பள்ளிகளில் -11ஆம் வகுப்பின் அரையாண்டுத் தேர்வுக்குப் பிறகு 12ஆம் வகுப்புப் பாடங்களைத் தொடங்கிவிடுவது இப்போதெல்லாம் சர்வ சாதாரணமாகிவிட்டது என்பதுதான்!     
இப்படி --ஒன்பதாம் வகுப்பு மாணவர், 10ஆம் வகுப்புப் பாடத்தையே இரண்டுவருடமும், 11ஆம் வகுப்பு மாணவர், 12ஆம் வகுப்புப் பாடத்தையே இரண்டுவருடமும்- ஒரேபுத்தகத்தை 'உருப்போட்ட' மாணவர், தொழிற்கல்வி நுழைவுத் தேர்வுகளின்போது, 'உருப்படாத' மதிப்பெண் எடுத்த ரகசியமும் இதுதான்! (எங்கள் மாவட்டத்தில் மெட்ரிக் பள்ளியில் படித்து மாவட்ட முதலிடம் பெற்ற மாணவி ஒருவருக்கு நுழைவுத் தேர்வில் தமிழ்நாட்டின் அரசுப பொறியியல் கல்லூரி எதிலும் இடம் கிடைக்காமல் நாக்பூர் போய்ப் படித்தது இங்குள்ள பலருக்கும் தெரிந்த ரகசியம்தான்!)
அந்தந்த வயதிற்கும் இருக்கக்கூடிய உளவியல், சொல்லாற்றல், பொருளுணர்தல், உலகஅறிவு பொதுகவனிப்புத் தன்மைக்கும் ஏற்பத்தான் பாடங்கள் தயாரிக்கப்படுவதாகக் கல்வியாளர்கள் சொல்கிறார்கள். உலகளவில் இது கடைபிடிக்கப்படுகிறது. இது உண்மைதான் எனில், இந்த வகுப்புகளைப்புறக்கணித்துவிட்டு -ஒரே தாண்டாகத் தாண்டி- அடுத்த வகுப்புக்கு மாணவர்களைக் 'கடத்தி' கொண்டு போவது ஏன்?
இப்படியான பள்ளிகளில், மாணவர்கள் மனப்பாட எந்திரமாக மாற்றப்படுவதன்றி வேறு வழியென்ன? பாடமும் புரியாமல், மனப்பாடமும் செய்ய முடியாமல் மாணவர்கள் படும் அவதியும், 'முடியாத'மாணவர்கள் கடுமையான தண்டனைக்கு ஆளாவதும் பள்ளிக் கூடத்தையே வெறுப்பதும், வாழ்க்கையே வெறுத்துப் போவதுமான நிலைமை தொடர்கதையாவதும் இப்படித்தானே! எப்படியாவது மதிப்பெண் வாங்கும் எந்திரமாக மாணவர்களை ஆக்கிவிடும் அவசரம்தானே இது?  மூன்றாவது கண்ணைத் திறக்கும் அவசரத்தில் இருக்கும் இரண்டு கண்களையும் ஒன்றரைக் கண்ணாக்கிவிடுவதன் விளைவு பற்றி யார் கவலைப்படுகிறார்கள்?       
தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறை தன் கட்டுப்பாட்டில் இருக்கும் பள்ளி அனைத்தும்  9,11ஆம் வகுப்புப் பாடநூல் முழுவதும் நடத்தி, ஆண்டுத் தேர்வும் நடத்தி, கோடை விடுமுறைக்கு பிறகே அடுத்தவகுப்புப் பாடங்களைத் தொடங்க வேண்டும் என்பதை  நடைமுறைப்படுத்த ஆணையிட வேண்டும்.
அதுவரை,மொழிப்பாடங்களில் செய்யுள்-உரைநடை-இலக்கணம், மொழிப்பயிற்சி மற்றும் கட்டுரை ஆகிய அனைத்தையும் ஒரே தேர்வில் எழுதிவந்த மாணவர்க்கு, 9ஆம்வகுப்பில்தான் இரண்டு தேர்வுத் தாள்களாகப் பிரிக்கப் படுகிறது. தமிழ் முதல்தாள்,  இரண்டாம் தாள் என்பது போலவே, ஆங்கிலத்திலும் 9ஆம் வகுப்பிலிருந்துதான் இரண்டு தாள்களுக்கும் தனித்தனித் தேர்வுகள் வைக்கப்படுகின்றன. அப்போதுதான் மொழிப்பயிற்சி சற்று மேம்படும் என்பதே இதன் நோக்கம். எனக்குத் தெரிந்து பல மெட்ரிக் பள்ளிகளில் கட்டுரை ஏடு என்னும் ஒன்றை மாணவர்கள் பார்த்த்தே இல்லை! அப்புறம் எப்படி மொழிவளம் கிடைக்கும்?
14 வயதில் -ஒன்பதாம் வகுப்பில்- இந்த மொழிப்பயிற்சிகள் விரிவாகத் தொடங்கப் படுவதற்கு அந்த வயதிற்கான கல்வி உளவியலே முக்கியமான காரணமென்பது கல்வியாளர் கருத்து.
இப்படி, முறையே 9,11 வகுப்பில் 10,12ஆம் வகுப்புப் பாடங்களை நடத்திக் கொண்டிருக்கும் ஆசிரியர்கள் அதையே தமது 'பாடக் குறிப்பேடு'களில் (Notes of Lesson) எழுத முடியாது!  அப்போதுதான், 'பூனை வெளியே வந்துவிடுமே?' இந்த நிலையை மாற்றி, முறைப்படுத்துவதன் மூலமாக ஆசிரியர்கள் அந்தந்த வாரமும் மாணவர்களுக்கு நடத்துவது ஒன்று, ஏடுகளில் எழுதிவைப்பது ஒன்று என்னும் 'ஏமாற்று' வேலைக்கும் இடந்தரவேண்டியதில்லையே?
இதோடு, மொழிப்பாடங்களில் அந்தந்த வயதிற்குரிய மொழிப்பயிற்சிகள் மீறப்படும் போது, அல்லது விடப்படும்போது, அதன் தொடர்ச்சி எவ்வாறு மாணவர்களுக்குக் கிடைக்கும்? மொழிப்பயிற்சி முழுமையாகமலே எப்படி அந்த மாணவர்கள் 10, 12 ஆம் வகுப்புத் தேர்வை எழுத முடியும்? கணிதப்பாடத்திலும், அறிவியல், வரலாற்றுப் பாடங்களிலும் முந்திய வகுப்பின் தொடர்ச்சியாகப் பல பாடங்கள் வருகின்றன. 9,11ஆம் வகுப்புப் பாட நூல்களையே பார்க்காத மாணவர் எப்படி அவற்றை உள்வாங்கமுடியும்?  எந்திரகதியாக 'உருப்'போடுவதன்றி வேறு என்ன செய்ய முடியும்?
கல்வியாளர் கருத்தையும், மாணவர் உளவியல் சார்ந்த உடல் நலனையும் பற்றிக் கவலைப் படாதவர்கள்தான் இந்தப் புதியவகையிலான 'டபுள் ப்ரமோஷனை' நடத்துகிறார்கள். விடுதிகளில் தங்கிப் படிக்கும் பல்லாயிரக் கணக்கான 9,11ஆம் வகுப்பு  மாணவரையும் பாடாய்ப் படுத்தி, பெற்றோரிடமும் “கோடைக்கால சிறப்புத் தொடர்வகுப்பு“ எனும் என, லட்சக்கணக்கில் கொள்ளையடிக்கவும் செய்கிறார்கள்.
இந்தச் செயல் சரிதான் எனில், 9,11 ஆம் வகுப்பையே கல்வித்துறை எடுத்துவிடலாமே?
அப்படி எடுத்துவிடலாமெனில், இப்போது நடைமுறையில் இருக்கும் 15 வயதுக்குப் பதிலாக, 14 வயதிலேயே பள்ளி இறுதித்தேர்வை (SSLC) எழுதச் சொல்லிவிடலாமே? அதேபோல 17 வயதுக்குப் பதிலாக 16வயதிலேயே மேல்நிலைத் தேர்வை (+2) எழுதச்சொல்லிவிடலாமே? (இல்லை இல்லை தவறாகச் சொல்லிவிட்டேன், 14வயதில் SSLC, அடுத்த வருடமே+2, 15வயதில் கல்லூரிக்கே போய்விடலாம்!பிறகு 18 வயதில் இளங்கலை(BA), 20 வயதில் முதுகலை (MA) முடித்துவிடலாம்... வாழ்க்கையிலேயே இரண்டு வயதை 'மிச்சம்'பிடிக்கலாம்ங்கோ...!)
மாணவர்கள் 9,11ஆம் வகுப்புகளை இழப்பதன்மூலம் அந்தந்த  வருட அமைதியை இழக்கிறார்கள். 'அடுத்த வருடம்தான் அரசுத்தேர்வு' எனும் நினைவு தரும் மனஅமைதி முதலில் போய்விடுகிறது. முதலில் 10ஆம் வகுப்பு அரசுத்தேர்வுக்கு ஒன்பதாம் வகுப்பிலிருந்தும், பிறகு 12ஆம்வகுப்பு அரசுத்தேர்வுக்கு 11ஆம் வகுப்பிலிருந்தும் -ஒவ்வோராண்டுக்காலம்- முன்தயாரிப்பு எனும் நிதானம் மலையேறி 2+2 ஆக 4 ஆண்டுகளுமே பரபரப்புத்தான்! எதையுமே பரபரப்பாகச் செய்தால், அதன் ஆழ அகலப் பரிமாணங்கள் தெரியாமலேபோகும் என்பது எல்லா விஷயங்களுக்குமே பொருந்தும்தானே? 'அவசரத்தில் அண்டாப் பானையில்கூட கை நுழையாது'தானே?
 
அந்த மாணவ -மாணவிகளைப்  பார்த்திருக்கிறீர்களா? உண்மையிலேயே நன்றாகப் படிக்க வேண்டும் என்று நினைக்கிற மாணவர்கள்தான் அதிகமாகச் சிரமப்படுகிறார்கள்! (இந்தத் தத்துவத்தை அறிந்த சிலர்தான், 'பாடமே இது பொய்யடா-வெறும் 'மார்க்'கடைத்த பையடா' என்று 'வேறு'வழிகளில் பயிற்சிபெறுகிறார்கள்!)  'நன்மாணாக்கர்'களோ பாவம் -பரிதாபமாக அதிகாலை 4-1/2மணிக்கே எழுந்து, 5-6கணக்கு, 6-7இயற்பியல்,  7-8வேதியல். பிறகு 9-5 பள்ளிக்கூடம். பிறகு 5-1/2 மணிக்கு வீட்டுக்கு வந்தவுடன் உடை மாற்றிக்கொண்டே ஒருவாய் காப்பியை வாயில் ஊற்றிக்கொண்டே பரபரப்பார்கள்! மீண்டும்,-"மாலை முழுதும் விளை யாட்டு"என்றெழுதிய பாரதியை மனசாரத் திட்டிக்கொண்டே 6-7தாவரவியல், 7-8விலங்கியல் என்று சென்றிடுவார் எட்டுத்திக்கும்! அப்படி ('ட்யூஷன்') சென்றால்தானே (மதிப்பெண்) செல்வங்கள்யாவும் கொணர்ந்திங்கு சேர்க்க முடியும்?
"இந்தப் பரபரப்பான உலகத்தில் எல்லாம் சகஜமப்பா!" என்று எதிலும் ஒட்டாதவர்களாக - கண் அங்கேயிங்கே பாவாமல், குதிரைக்கு ஒரு கண்பட்டையைப் பூட்டி விடுவார்களே அதுமாதிரி -உலக நியாய, அநியாயங்களைக் கண்டுகொள்ளாமல், இப்படி, 'தானுண்டு, தன்ட்யூஷன்உண்டு' என்று, அப்போதே அவர்களுக்கு பிரச்சினைகளிலிருந்து 'அந்நியமாதல்-ஞானம்' வந்துவிடாதா என்ன?
இது நம் தமிழகஅரசு பள்ளிக்கல்வித்துறைக்குத் தெரிந்தோ தெரியாமலோ நடக்கிறது. நிச்சயமாகத் தெரிந்து-அனுமதியுடன் நடக்கவாய்ப்பில்லை. ஆனால், நடப்பது நிச்சயம்  ஊரறிந்த ரகசியம்! இப்படி நடப்பது சரியா, சரியில்லையா எனும் விவாதத்திற்கே உளவியலில் இடமில்லை.
இது தொடர்வது சரிதானா?  என்பதுதான் இப்போது எழுந்திருக்கும் கேள்வி.
      அதிகமில்லை கனவான்களே! ''அந்தந்த ஆண்டு மாணவர்க்கு, அந்தந்த ஆண்டுக்குரிய பாடங்களில் மட்டுமே தேர்வு நடத்தப் படவேண்டும். இதைமீறி, ஓராண்டு நடத்த வேண்டிய பாடங்களை 3மாதம், 6மாதத்தில் நடத்துவதாகத்தெரிந்தாலோ, அடுத்த வகுப்புக்குரிய பாடங்களை முந்திய ஆண்டிலேயே நடத்தினாலோ, மாணவர் நலன்சார்நத கோடை விடுமுறை மறுக்கப் பட்டாலோ, அந்தக் கல்வி நிறுவனங்கள் மீது தமிழக அரசு - பள்ளிக் கல்வித்துறை நடவடிக்கை மேற்கொள்ளும்'' என  சுற்றறிக்கை  அனுப்பினால் மட்டும் போதாது. கண்காணிப்பும் தொடர் நடவடிக்கைகளும் தேவை.
------------------------------ ( மீள் பதிவு ) ----------------------------
வெளிட்டமைக்கு நன்றி – தினமணி – (சென்னைப் பதிப்புக் கட்டுரைப் பகுதி கருத்துக்களம்- First Published : 22 April 2013 04:20 AM IST
http://dinamani.com/specials/karuthuk_kalam/2013/04/22/
---------------------------------------------------------------------------

1 கருத்து:

  1. மிக சரியாக சொன்னீர்கள். பிள்ளைகளையும் மூளை சலவை செய்து பொறுத்துக் கொள்ள செய்துவிடுகிறனர் பெற்றோர். கோடை விடுமுறையில் பாடல் சொல்லிக் கொடுக்காத பள்ளிகளை பெற்றோர் விரும்புவது இல்லை.

    பதிலளிநீக்கு