மறைமலை அடிகள் பிள்ளைத்தமிழ் - நா.மு.


மறைமலை அடிகள் பிள்ளைத்தமிழ்
தாலப்பருவம் – பாடல் எண்-1
புலையுடல் தினவே கொலையிடும் உணவே
             பேணாய் வாணாளில்
    புகழ்ஒளி படவே குலவெறி படவே
             போராள் சீராளா!
ஒலியுடை சிறுவாய் வகையொலி யறிவாய்
             ஓதா மூதாய்வால்
    உறுசுவை அமுதாய் ஒலியுடை தமிழாள்
             ஓயா வாயோனே!
முளையிடு மயலார் மொழிகளின் மயலால்
             மூவாத் தாயாம்நம்
    முதன்மொழி உயர்வே துயில்தரும் கனவாய்ப்
             போகா தேகாப்பான்
தலையிடும் விடிவேள், தமிழ்மலை யடிகேள்!
             தாலோ தாலேலோ
    தமிழறி புலவா!   பலகலை வலவா!
             தாலோ தாலேலோ!
-----------------------------------------------  
இப்பாடல் கருத்துகளுக்கு ஆதாரமான அடிகளின் நூல்கள் காண்க-
உரைமணிக்கோவை-பக்-11, தமிழர் மதம்-பக்-31-43, சைவசித்தாந்த ஞானபோதம் –பக்-72-81, தொலைவிலுணர்தல்-பக்19,53, சாகுந்தல நாடக மொழிபெயர்ப்பு-பக்100,127, வேளாளர் நாகரிகம்-பக்-16, அறிவுரைக் கோவை-பக்-46-73,
மற்றும் “தமிழறி புலவா தனிஅயில் வலவா“ எனும் வரிகளை, “திருமலை முருகன் பிள்ளைத் தமிழ்” (அய்யா பண்டாரத்தையா) பாடல் எண்-27இல் இருந்து தழுவி எடுத்தாண்டிருப்பதை நன்றியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்- நா.மு. (1975ஆம் ஆண்டு திருவையாற்று அரசர் தமிழ்க் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்தபோது எழுதியது)
-----------------------------------------------------------

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக