”கேடி பில்லா கில்லாடி ரங்கா” - வேண்டாம் பாண்டிராஜ் இந்த விபரீத தலைப்பு!


                      
       பசங்க, வம்சம், மெரினா படங்களைத் தொடர்ந்து இயக்குனர் பாண்டிராஜ் இயக்கும்  படம் கேடி பில்லா கில்லாடி ரங்கா”. விமல்சிவகார்த்திகேயன், பிந்துமாதவி, ரெஜினா, சூரி, சுஜாதா நடிக்கின்றனர்.
                                            (இணையத்தில் கிடைத்த செய்தி
                                       ( http://cinema.nakkheeran.in/Talkies.aspx?T=1731)

                   “பசங்க“ படத்தை எடுத்த இளம் இயக்குநர் பாண்டிராஜ் அதன் மூலம் பாராட்டுகளை அள்ளிக் குவித்தார். அவர் பிறந்த எங்கள் மாவட்டமான புதுக்கோட்டை மட்டுமல்ல ஊர்-உலகமே புகழ்ந்தது.
                   புதுக்கோட்டை மாவட்டம் நச்சாந்துப் பட்டிப் பள்ளியில் படித்த அனுபவத்தை அப்படியே திரை மொழியில் கொண்டுவந்து கல்வி உலகத்தை மட்டுமின்றித் திரைஉலகத்தையும் திரும்பிப் பார்க்க வைத்தார்.
                   அந்தப் படத்திற்குத் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம் அந்த ஆண்டின் சிறந்த படங்களில் ஒன்றாகத் தேர்வு செய்து, பரிசளித்துப் பாராட்டியது. சங்கத்தின் தலைவர் பேரா.அருணன், பொதுச்செயலர் எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வன், மற்றும் துணைப்பொதுச்செயலராக இருந்த எழுத்தாளர் மேலாண்மை பொன்னுச்சாமி ஆகியோர் பரிசளித்துக் கௌரவிக்க, சென்னையில் நடந்த அந்தவிழாவில் அந்தப் படத்திற்கான பாராட்டுரையை அப்போது சங்கத்தின் மாநிலத் துணைத் தலைவராக இருந்த நான்தான் ஆற்றினேன்.
                  அப்போது நான் பேசிய பேச்சின் இடையே, ஆசிரியர்கள் என்பவர்கள் பள்ளியில் இருக்கும் பெற்றோர்கள், பெற்றோர்கள் என்பவர்கள் வீட்டில் இருக்கும் ஆசிரியர்கள் என்பதாகப் பெற்றோர்களும், ஆசிரியர்களும் மட்டுமல்ல, மாணவர்களும் புரிந்துகொண்டால் கல்வி கற்கணடாகும். என்று பேசினேன். 
                    இது நான் எப்போதும் பேசுவதுதான். இதை எடுத்துத் தனது “ஈஸியாக ஜெயிக்கலாம், ஜாலியாகப் படிக்கலாம்“ எனும் நூலில் முதல் பக்கத்தில் மேற்கோள் போலக் கட்டம் கட்டிப் போட்டுக் கொண்ட என் மாணவர் கிருஷ்ண.வரதராஜன், இது பற்றி எனக்கு நன்றி கூடத் தெரிவிக்க வில்லை என்பதும், இதை அறியாத “புதிய தலைமுறை“ வார இதழ், அந்த நூலைப் பற்றிய அறிமுகத்தில் இதே வாசகத்தைத்தான் பக்க நடுவில் கட்டம் கட்டிப் போட்டிருந்தது என்பதும் தனி ஒரு சோக நகைச்சுவை!
                  மேடையில் இருந்து இதைக் கேட்டுக்கொண்டிருந்த இயக்குநர் பாண்டிராஜ். தனது அடுத்த படமும் கல்வியைப் பற்றியதுதான் என்றும், “கவிஞர் முத்துநிலவனின் இந்த வரிகளை அந்தப் படத்தில் பயன்படுத்திக் கொள்ள அவர் அனுமதிக்க வேண்டும்“ என்றும் பேசினார். நானும் “நல்லாப் பயன்படுத்திக்கங்க இயக்குநரே!“ என்று அப்போதே தெரிவித்தேன்.
                   ஆனால் அவரது அடுத்தடுத்த வம்சம், மெரினா படங்களில் அந்த வரிகளைப் பயன்படுத்தியதாகத் தெரியவில்லை. சரி, போகட்டும்.
                   இப்போது அந்த அறிமுகம் தந்த உரிமையில் கேட்கிறேன் -
                   
                    அடுத்த உங்கள் படத்திற்கு “கேடி பில்லா கில்லாடி ரங்கா” என்று பெயர் வைத்திருப்பதாகப் பத்திரிகையில் படித்தேன், வேண்டாம் பாண்டிராஜ் இந்த விபரீத தலைப்பு! 
                     என்னதான் நகைச்சுவையாகப் படமோ, படத்தலைப்போ இருந்தாலும் இந்த இருவரும் யார் என்ற செய்திப் பின்னணி தெரியாமல் தலைப்பு வைக்கிறீர்கள் என்று நினைக்கிறேன்.
                    யார் இந்த பில்லாவும் ரங்காவும்- 
                    இந்த இணைப்பைச் சொடுக்கிப் பாருங்கள்...           
                    http://www.leadandhra.com/News/4180
பார்க்க நேரமில்லாதவர்களுக்குச் சொல்கிறேன் - 1978இல் இந்தியத் தலைநகராம் டெல்லியில் பள்ளிச் சிறுவன் சிறுமியான சஞ்சய் மற்றும் கீதாவைக் கடத்திக்கொண்டுபோய் படுகொலை செய்த பாவியர்தாம் அந்த இருவரும். அதிலும் பச்சிளம் குழந்தையான கீதாவைக் கொடுமையான முறையில் பாலியல் பலாத்காரம் செய்து கொன்ற படுபாவிகள்தாம் அந்த இருவரும். பின்னர் 1982இல் அவர்களுக்குத் தூக்குத் தண்டனை தரப்பட்டது என்பதை அன்றைய ஊடகங்கள் வெளிச்சம் போட்டுக் காட்டின.
                   அந்தச் செய்தி தந்த வெளிச்சத்தில்தான் அமிதாப்பச்சன் “டான்” என்று படம்எடுத்துக் கல்லாக் கட்டினார். உடனே அந்தப் படத்தைத் தமிழில் எடுத்து, அதற்கு “பில்லா“ என்று பெயர் சூட்டினர் பெருங்குணத்தார். வசூலில் பெரும் போடு போட்ட அந்தப் படம்தான் ரஜினியை சூப்பர் ஸ்டார் ஆக உறுதிப்படுத்தியது என்பார்கள் கோலிவுட் வரலாறு தெரிந்தோர்.
                    மீண்டும் இதே பெயரில் அஜீத் நடித்த படம் வெற்றிபெறவே அதன் இரண்டாம் பாகம் தயாராவதாகவும் கேள்வி. இவர்களிடம் நாம் போய் இந்தக் கேள்வியைக் கேட்கமுடியாது, ஏனெனில் இவர்கள் யாரும் “பசங்க“ படம் எடுத்த பாண்டிராஜ் போல மாணவர் உலகத்தைப் பற்றிக் கவலைப்பட்டுப் படம் எடுத்தவர்கள் இல்லை.
                      பசங்க, மெரினா போல, குழந்தை உளவியலும், குழந்தைகளுக்கான கல்வியின் அவசியத்தையும் அறிந்து, புரிந்து படம் எடுத்து வெற்றியும் பெற்ற பாண்டிராஜ் அதற்கு நேர் எதிராக பில்லா ரங்கா என்று படம் எடுப்பதைத்தான் தாங்க முடியாமல் எழுதிக்கொண்டிருக்கிறேன்.
                       திரைப்படங்களுக்குப் பெயர் வைக்கும்போது காரணமில்லாமல் தான் வைக்க வேண்டும் என்று பிடிவாதமாக இருக்கும் இயக்குநர்கள் உண்டு. (ப்ச்.. மெஸேஜ் சொல்லியிருக்கிறார் என்று யாரும் சொல்லிவிடக் கூடாது என்பதில் எவ்வளவு தெளிவு பாருங்கள்...
                       இப்படித்தான் இரட்டையாகப் பிறந்த தந்தைக்கு மீண்டும்இரட்டைக் குழந்தைகள் எனும் கதைக்கு “ஜீன்ஸ்”(GENES) என்று அறிவியல் படிப் பெயரிட்டிருக்கும் சங்கர் எனும் இயக்குநரை என் போன்றவர்கள் சிந்தித்துப் பாராட்டி விடுவார்களோ என்று அஞ்சித்தான் அந்தப் பட விளம்பரத்தில் ((JEANS) என்று போட்டுவிட்டார் சங்கர் ! தெளிவு! தெளிவு! )
                      எத்தனையோ தியாகத் தலைவர்கள், தத்துவமேதைகள், அறிவுலக மற்றும் கலையுலக மேதைகள் வாழ்ந்து சாதித்து மறைந்த நம் நாட்டில் இப்படி சமூகப் பொறுப்பில்லாமல் கேடிகளின் பெயரைத் தன் திரைப்படத்திற்கு வைக்கும நிலை --அவர் முன்னர் கவலைப்பட்டு எடுத்த பிஞ்சுக் குழந்தைகளின் நெஞ்சில் நஞ்சைக் கலக்கும் செயல்தான் என்பதை உணர்ந்து-- நலல இயக்குநரான பாண்டிராஜ் அவர்களுக்கு எப்போதும் வரவேண்டாம் என்று அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.
------------------------------------------------------------------------------------------------------------
நன்றி - “கீற்று” இணைய இதழ் - http://www.keetru.com/index.php?option=com_content&view=article&id=21956:2012-11-12-10-37-24&catid=10:cine-news&Itemid=130
எடுத்து வெளியிட்ட  மாத இதழ் ”மணிப்புறா” புதுக்கோட்டை - ஏப்ரல்,2013
------------------------------------------------------------------------------------------------------------

6 கருத்துகள்:

  1. அனுப்புனர்-
    murugesh mu haiku.mumu@gmail.com
    இனிய தோழரே...
    உங்களின் மிக நியாயமான
    இந்த கோரிக்கையை
    இயக்குநர் பாண்டிராஜ்
    செவிம்டுத்து கேட்டால்
    நல்லதுதான்.
    பொறுத்திருந்து பார்ப்போம்.
    -மு.மு

    பதிலளிநீக்கு
  2. சொல்வது நம் உரிமை.
    கேட்பது அவர்கள் கடமை. ஆனால், கேட்காததே தமிழ்ச்சூழல் நிலைமை.
    பார்க்கலாம். நன்றி, தோழ்ர் மு.மு.!

    பதிலளிநீக்கு
  3. 13 நவம்பர், 2012 8:39 am அன்று,
    மு இளங்கோவன் எழுதியது:

    வணக்கம் ஐயா
    தீபாவளி தமிழர் திருநாள் இல்லை என்பதால் பொங்கலுக்கு இப்பொழுதே வாழ்த்தைச் சொல்லி வைக்கின்றேன்.

    சமூக அக்கறையுடன் பில்லா ரங்கா கதையை நினைவூட்டி இயக்குநரைத் திருத்தியமைக்கு நன்றியன்

    அன்புள்ள
    மு.இளங்கோவன்
    புதுச்சேரி

    பதிலளிநீக்கு
  4. நன்று. பாண்டியராசு கருதிப்பார்த்து முடிவை மாற்ற வேண்டும். அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் /தமிழே விழி! தமிழா விழி! எழுத்தைக் காப்போம்! மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்!-- என்று ”கீற்று” இணைய இதழ்ப் பக்கத்தில் எழுதிய திரு இலக்குவனார் திருவள்ளுவன் அவர்களுக்கும்,கட்டுரையைப் படித்தவுடனே எனது தனியஞ்சலில் எழுதிய புதுச்சேரி அய்யா முனைவர் மு.இளங்கோவன் அவர்களுக்கும் எனது நன்றிகள் பல.
    திரைப்படம் தொடர்பான செய்தி என்பதாலோ என்னவோ இந்தப் படைப்பு மட்டும் ஒரே நாளில் 200 பக்கம் பார்க்கப் பட்டிருப்பதும் ஒரு செய்திதான்!--நா.மு.

    பதிலளிநீக்கு
  5. நம்மாளுங்க பூ வித்தா காசு கூட வராதுண்ணு
    பேய் விக்க போயிருவாங்க. அது மாதிரி பில்லான்னா
    காசு வருதுன்னு தெரிஞ்சு போச்சு. அமிதாப், ரஜினி, அப்புறம்
    லேட்டஸ்டாய் அஜீத். அதுவும் பில்லா 2 ஆல் நஸ்ட்டம்தான்.
    துப்பாக்கியை தூக்கிக் கொண்டு அலைவதை அஜீத் நிறுத்த
    வேண்டும் என்று ஆனந்த விகடன் அன்புக் கட்டளை இட்டது.
    இப்ப நம்ம புதுக்கோட்டைக்காரர் பாண்டிராஜ் அந்த பேரை
    எடுத்திருக்க வேண்டாம்.

    பதிலளிநீக்கு
  6. நன்றி சார்.
    கீதாவின் புத்தக வெளியீட்டு விழாவில் பார்த்தபோது கூட சொல்லவே இல்ல...
    வாங்க வாங்க... என் வலைப்பக்கம் முழுவதும் பார்த்துட்டு சொல்லுங்க... நன்றி வணக்கம்.

    பதிலளிநீக்கு