திங்கள், 26 மார்ச், 2012

எனது புதிய மரபுகள் - தொகுப்பிலிருந்து...


டில்லி விளம்பரம்.

தொலைக்காட்சியின்
மொழி உணர்வு
தூய்மையானது
தமிழ்ச் செய்தி
இன்னும்
தமிழில்தான் வருகிறது!

தொல்பொருள் ஆய்விலும்
தொலைக்காட்சியின்
பங்களிப்பு அபாரம்
வாரா வாரம்
ஒரு திரைப்படம்!

எங்கள் தாத்தாவுக்கு
ஏக சந்தோஷம் -
அடுத்த வாரம்
ஆயிரம் தலைவாங்கிய
அபூர்வ சிந்தாமணியாம்!

கலைக்கு வயதில்லை!
சும்மா சொல்லக்கூடாது
அந்த ஐ.ஏ.எஸ். வீட்டுக்
கிழவியின் நடனம்
அருமை!

ஆக,
நீங்கள் இந்த
அரசாங்கத் திட்டத்தை
ஆதரிக்கிறீர்கள்
என்றே முடிந்து
எரிச்சலைக் கிளப்பும்
பேட்டிகள் -
திட்டங்களுக் கெதிராக
மக்களைத் திரட்டும்
நல்ல ஏற்பாடுகள்!

மேதைமைக்கு
கால வரம்பில்லை
தொடக்ககால
நாடகங்களை
இன்னும் தொடர்வது
அதனால்தான்.

மின் வெட்டுக்கூட
மக்களுக்கு
மகிழ்ச்சி தருவது
டி.வி. நாடகத்தால்தான்!

இரண்டாம்ப்பு படிக்கும்
 என் மகன்
Colour TV.’  என்பதை
கோளாறு டி.விஎன்றே
சரியாகப் படித்தான்!

எப்போதோ பூக்கும்
ர் அத்திக்காக
எவ்வளவு நாள் தான்
இதற்கு
மின்-நீர் விடுவது?

அறிவியலின்
இளைய பிள்ளை
ஆள் வோரின்
கைப் பிள்ளையாய்
ஆடும் வரை
டி.வி.யின்
சுருக்க விளக்கம்
டில்லி விளம்பரம் தானே?

அழுக்கில் கிடக்கும்
இந்த
சோப்புப் பெட்டியை
சுத்தப் படுத்தும் வரை
ஏ ! தவணைக் காரா!
என்னை
இரண்டு துன்பங்களிலிருந்து
காப்பாற்று!

இந்தப் பெட்டியை
வந்து
எடுத்துக்கொண்டுபோ!
--------------------------------------------(எழுதிய ஆண்டு 1989---தனியார் தொலைக்காட்சிகள் இல்லாத போது எழுதியது. இப்போதும் அரசுத் தொலைக்காட்சிக்கு இது பொருத்தமாகத்தானே உள்ளது? )---------------------------------------------------------  

4 கருத்துகள்:

 1. கோளாறு டிவி என்ற நகைச்சுவையும் டிவியைப் பற்றிய புரிதலும் அருமை.

  பதிலளிநீக்கு
 2. முன்பாவது இரண்டு துன்பங்கள்.. இப்போது எல்லாமே துன்பங்கள்... காப்பாற்ற கரங்கள்தான் போதாது.
  அனுப்புனர்: Karuppiah Ponnaiah pavalarponka@yahoo.com
  பதிலளி: Karuppiah Ponnaiah
  பெறுநர்: "நா.முத்து நிலவன்"
  தேதி: 29 மார்ச், 2012 10:01 pm

  பதிலளிநீக்கு
 3. எப்போதோ பூக்கும்
  ஒர் அத்திக்காக
  எவ்வளவு நாள் தான்
  இதற்கு
  மின்-நீர் விடுவது?

  வாவ் அருமை ஆசிரியரே
  www.malartharu.com

  பதிலளிநீக்கு
 4. நண்பர் விச்சு,அய்யா பாவலர் பொன்.க. அப்புறம் திரு ஸ்பான்சர்(?) ஆகிய மூவருக்கும் நன்றி,
  நா.மு.

  பதிலளிநீக்கு

Google+ Followers

Related Posts Plugin for WordPress, Blogger...