எனது புதிய கவிதை - என்னைக் கைது செய்யுங்கள் அரசே!

கைது செய்யுங்கள்! அரசே!
என்னைக் கைது செய்யுங்கள்!

ஆசிரியரை வகுப்பறையில்
குத்திக் கொன்ற வழக்கில் –
அரசே! என்னைக் கைது செய்யுங்கள்!

நான் என்ன செய்தேன் என்றா
கேட்கிறீர்கள்?
மௌனமாக இருந்தேனே?
மௌனம் சம்மதத்திற்கு அறிகுறிதானே?

வாழ்க்கையைக் கற்றுக்கொடுக்க
வழியில்லாமல்,
மனப்பாடம் செய்யும்
மதிப்பெண்ணுக்கே மதிப்புக் கொடுத்து,
அவன் நெஞ்சை
நஞ்சாக மாற்றியதில்
ஆசிரியர்க்குப் பங்கில்லையா?
என்னைக் கைது செய்யுங்கள்!  அரசே!
என்னைக் கைது செய்யுங்கள்!

முப்பது ரூபாய் கொடுத்து
வாங்க வேண்டிய சீட்டுக்கு
முந்நூறு ரூபாய் கொடுத்து
லஞ்ச ஒழிப்புப் படத்தைக்
குடும்பத்தோடு பார்த்தேனே? -
அநீதிக்கு எதிராகப் போராடாமல்,
அநீதியையே வாழ்க்கை முறையாக
அவனுக்குக் கற்பித்ததில்
தந்தைக்கும் பங்குண்டுதானே!
என்னைக் கைது செய்யுங்கள் அரசே!
என்னைக் கைது செய்யுங்கள்!

ஒருவரை ஒருவர்
அடுதலும் கெடுதலுமே வாழ்க்கை எனும்
நெடுந்தொடர்களில் மூழ்கி,
பிள்ளைகளின் உணர்வுகளை
நல்லவிதம் நடத்தாமல்
பாசத்திற்கு அந்தப்
பச்சை மண்ணை ஏங்கவிட்டுப்
பார்த்திருக்கும் தாய்க்கும்
கொலையில் பங்குண்டு தானே?
என்னைக் கைது செய்யுங்கள் அரசே!
என்னைக் கைது செய்யுங்கள்!

ஒன்றைப் பத்தாக்கி
நன்றைப் புறந்தள்ளி –
பரபரப்புத் தேடியே
பதரைக் கதிராக்கி
வழிகாட்டு மரமே
வழிகெட்டுக் கிடக்கின்ற
ஊடகக் காரருக்கும்
உண்டல்லோ கொலைப்பங்கு!
என்னைக் கைது செய்யுங்கள்! அரசே!
என்னைக் கைது செய்யுங்கள்!

வாருங்கள்!
வந்துவிட்டீர்களா?
கைதுசெய்யுங்கள் –

ஒரு நிமிடம்!

எங்களையெல்லாம்
ஆட்டிவைத்துப் பார்த்திருக்கும்
அரசு மட்டும் விதிவிலக்கா?

நெஞ்சில் கைவைத்து
நேர்மையாகச் சொல்லுங்கள்!
எங்களின் குற்றத்தில்
உங்களுக்கும் பங்கில்லை?

அதனால் அரசே!
கைது செய்யுங்கள்! அரசே!
உங்களையும் நீங்களே கைதுசெய்யுங்கள்!

செத்துப் போனதும் உமா அல்ல!
நம் அனைவராலும்
அன்றாடம்
பதறப் பதறக்
குத்துப் பட்டுக் கிடக்கும்
சுயநலக் கல்வி முறை!

இர்பான் எனும் அம்பை
ஏவிவிட்ட நமக்கெல்லாம் -
உமா -


ரத்தம் பீறிடக்
கத்திக் கதறிய நேரத்தை
ஒரு கணமேனும் -
உணர்ந்தால்தான் விடுதலை!
-----------------------------
( சென்னை - பாரிமுனை - அரண்மனைக்காரன் தெருவில் உள்ள செயிண்ட் மேரீஸ் ஆங்கிலோ இந்தியன் மேல்நிலைப்பள்ளியில் இந்தி மற்றும் வேதியியல் ஆசிரியராக வேலைபார்த்தவர் உமா மகேஸ்வரி. இரண்டு பெண் குழந்தைகளின் தாய். 39 வயது. பி.எச்.டி.படித்த இவருக்கு வங்கியில் வேலைகிடைத்தும் அதைப் புறந்தள்ளிவிட்டு, ஆசிரியப் பணியை விரும்பி ஏற்று, ஈடுபாட்டுடன் செய்துவந்த இவர்,  கடந்த 09-02-2012 வியாழன் அன்று காலை 10.30மணியளவில் அவரிடம் 9ஆம் வகுப்புப் படித்துவந்த இர்பான் எனும் மாணவனால், வகுப்பு அறையிலேயே -நாற்காலியில் அமர்ந்த நிலையிலேயே- கதறக் கதற 14 முறை கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்ட செய்தியின் பின்னணியில், அழுதுகொண்டே எழுதிய கவிதை இது. 
இதே ஆசிரியர் உமா கொலைதொடர்பான எனது கட்டுரையைப் படிக்கச் சொடுக்குக -
http://valarumkavithai.blogspot.com/2012/03/blog-post_10.html 
– நா.முத்துநிலவன், 19-02-2012) 


           நமது வலையில் வந்த இந்தக் கவிதையைப் படித்துவிட்டு, இதனைத் தமது “தொலைத் தொடர்புத் தோழன்” மாத இதழில் எடுத்து வெளியிட்டுக் கொள்ள அனுமதியும் கேட்டு, மார்ச்-2012 இதழின் கடைசி முழுப்பக்கக் கவிதையாக எனக்கு “நன்றி“ தெரிவித்து வெளியிட்ட அந்த இதழின் ஆசிரியர் குழுவில் உள்ளவரும் அவர்களின் -- பி.எஸ்.என்.எல்.இ.யு. சங்கத்தின்-- மாநில நிர்வாகிகளில் ஒருவருமான தோழர் பாபு ராதா கிருஷ்ணன் அவர்களுக்கும் இதழாசிரியர்களுக்கும் நானல்லவா நன்றி தெரிவிக்கவேண்டும்? நன்றி நண்பர்களே!
          இதில் ஒரு சிறப்பு என்ன வெனில், கல்வியுடன் நேரடித் தொடர்புடைய ஆசிரிய அமைப்புகள் எதுவும் இதுவரை இதுபற்றி என்னிடம் வாய் திறக்காத போது, ஒரு பொதுத்துறை அமைப்பு எடுத்து வெளியிட்டதுதான்! மீண்டும் நன்றி நண்பர்களே!
 - நா.முத்து நிலவன் - 11-03-2012)

9 கருத்துகள்:

  1. அன்பு முத்து நிலவன் அவர்களுக்கு

    வணக்கம்..
    சென்னை பள்ளியில் நடந்த அதிர்ச்சி நிகழ்வு குறித்த கருத்துக்கள் வெவ்வேறு பார்வைகள் வந்த வண்ணமுள்ளன.
    உங்களது கவிதைக்கும் இதில் பங்கிருக்கிறது. இருக்கும் நிலவரங்கள் எதுவும் மொத்தத்தில் சரியில்லை என்பதன்
    மெலிவான பிரதிபலிப்பு உங்கள் படைப்பு..
    இன்றைய ஹிண்டு ஞாயிறு சிறப்புப் பகுதியில் விஜே நாகசுவாமி என்ற பத்தியாளர் எழுத்யிருப்பதை வாசிக்கவும்.
    http://www.thehindu.com/opinion/columns/Vijay_Nagaswami/article2906583.ece
    மிகவும் எதிர்பாராத, அரிதான அதிர்ச்சி நிகழுகளைன்பால் கருத்துக்கள் உருவாதல் பற்றிய நல்ல விவாதக் குறிப்பு அது.

    எஸ் வி வி

    பதிலளிநீக்கு
  2. இன்றைய சமுதாய,குறிப்பாக மாணவச சமுதாயம், சீர்கேட்டிற்குக் காரணம் ஒன்றுக்கும் உதவாத கல்விமுறையே என்பது அனைவருக்கும் தெரியும்!!
    தன்னலமிக்க கல்வி வணிகர்களும் போலி அரசியல்வாதிகளும் இருக்கும் வரை இதனைத் திருத்துவது கடினம்!

    க.வேழவேந்தன்.புதுக்கோட்டை-622 001.

    பதிலளிநீக்கு
  3. எதனைக்குறை சொல்வது என்றே தெரியவில்லை. என்னைக்கேட்டால் பெற்றோரைத்தான் குறை சொல்லவேண்டும். குழந்தைகளைக்கூட கவனிக்காமல் பணம், கௌரவம் என்று வாழும் சமுதாயச் சீர்கேடுதான் காரணம்.

    பதிலளிநீக்கு
  4. உண்மைதான்.இக்கல்விமுறையில் பாரிய மாற்றங்களை ஏற்படுத்தி நம் குழந்தைகளை விடுவிக்கத் தொடர்ந்து போராடாத நாமும் குற்றவாளிகள்தான்.எத்தனை நாள் இப்படியே புலம்பிக்கொண்டிருக்கப்போகிறோம் என்கிற கவலை நெருப்பாய்ச்சுடுகிறது

    பதிலளிநீக்கு
  5. மிக அருமை

    வேறு சிலரையும் விட்டுவிட்டீர்கள்.
    கல்வியை அறிவை வளர்க்கும் பெரும் கருவியாகக் கருதாமல் வயிரை வளர்க்க மாத்திரமே நாடிய் பெற்றொருக்கும் சிறை.

    கல்வி என்றால் என்ன என்று அறியாமல் ஆயிரக்கணக்கான கல்வி வல்லுனர் அதிகாரிகள் கூட்டத்திற்கும் சிறை தண்டனை.

    இவ்வளாவு போதுமா> இன்னும் கொஞ்சம் வேணூமா?

    உங்களாய்ப்போல அறிவும் தெளிவும் உள்ள கல்வியாளர்கள் ஒரு கவிதை எழுதி, என் கடன் இத்துடன் முடிவடைகிறது என்று நிம்மதியாக் போய்விடுகிறீர்கள்.

    அன்னா ஹஜாரே ஒரு பெரிய பட்டம் படித்தவர் இல்லை. ராணுவத்தில் லாரி ஓட்டி.வந்தவர்.

    அவர் வாழ்க்கையை அறிந்த நாம் ஒவ்வொருவரும் ஒரு அன்னாவாக மாறி, விடாது போராடவேண்டாம?

    பதிலளிநீக்கு
  6. நல்லதொரு கவிதை. தவறுக்கு காரணம் அந்த மாணவன் தான் என்றில்லாமல், இந்த கல்வி முறைக்கு எதிராக பலமான குரல் எழுப்பாத இந்த சமூகம் தான் என்பதை செவிட்டில் அறைந்தாற் போல உள்ளது. மிகச் சரி. பிரச்சனையின் நுனி மேயாமல் அடிவரை சென்று கவிதை வடித்த உங்கள் உள்ளத்திற்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள். அது மட்டுமல்ல உங்களது ஞான பீட கவிதையும் சிறப்பாக உள்ளது. நல்லதொரு இணைய தளத்தை எனக்கு அறிமுகப்படுத்தியதற்கும் என் நன்றி. காலம் கடந்து நான் படிப்பதற்கு என் கணிணி பழுதடைந்தது தான் காரணம்.

    பதிலளிநீக்கு
  7. சரியான நேரத்தில் இந்து நாளிதழ் இணைப்பை அனுப்பி உதவிய நண்பர் எஸ்.வி.வேணுகோபாலன் அவர்களுக்கு எனது நன்றி - அவரது மின்னஞ்சலுக்கும்

    திருத்துவது கடினம் தான் என்று தெரிந்தேதான் இயங்கவேண்டியுள்ளது வேந்தன்! எளிதாக முடிவது எதையாவது செய்து சுரண்டுவதுதான் என்பதுதான் இன்று உலகறிந்த உண்மையாகி விட்டதே!

    விச்சு, உங்கள் இணையத்தில் என்னைப்பற்றியும் எழுதிய அன்பிற்கு நன்றிகள் பல... தொடரட்டும் நம் தொடர்புகள்.

    தமிழ்! உங்கள் பின்னூட்டத்தோடு உங்கள் தொலைபேசி உரையாடலும் எனக்குப் பெரிய உற்சாகத்தைக் கொடுத்தது. மிக்க நன்றி தலைவா!

    அன்னா மீது எனக்கு நம்பிக்கையில்லை நண்பரே! அவர் சுயநல ஊடகங்களால் “ஊதிப் பெருக்கி” காட்டப்படுகிறார் என்பதே என் கருத்து - தவறானால் மன்னிக்க.

    பாபு! லேட்டானாலும் லேட்டஸ்டா வந்திருக்கீங்க போல... நன்றி தோழா தொடர்வோம்!

    அன்புடன்,
    நா.முத்துநிலவன்.
    புதுக்கோட்டை

    பதிலளிநீக்கு
  8. some times we feel ashmed of this happenings. Now a days students studying in matric schools are highly dangerous. they neither genious not fools. arai kuraiyaga padithu arai kuraiyaagavey melum padithu arai kuraiyaagavey vaz kirargal.

    பதிலளிநீக்கு
  9. அனுப்புனர்: Babu Radhakrishnan agalyababu@gmail.com
    பெறுநர்: "நா.முத்து நிலவன்"
    தேதி: 13 மார்ச், 2012 9:39 pm
    நான் உமாவிற்காக பரிதாபப்பட்டதை விட தனது பெயர் கூட தன் செயலால் மாற்றம் செய்யப்பட்ட அந்த மாணவனை அந்த நிலைக்கு தள்ளியதில் நமக்கும் பங்குண்டு என்று நான் வெட்கப்பட்டது தான் அதிகம் தோழா.
    babu radhakrishnan

    பதிலளிநீக்கு