திங்கள், 26 செப்டம்பர், 2011


என்னதான் செய்கிறான் முத்து நிலவன்?

                “வலைப்பூ ஆரம்பித்து விட்டான் முத்துநிலவன்என்பதோடு ஆரம்பித்து விட்டுவிட்டான் நிலவன்”  என்று யாரேனும் சொல்லிவிடுவார்களோ என்று அஞ்சிக் கொண்டேதான் ஒவ்வொரு நாளும் ஓடுகிறது. நம் வேலைகளை நாமே திட்டமிடக் கூடிய அளவிற்கு நான் பெரிய மனிதனும் இல்லை, திட்டமிடாமலே வேலை செய்யும் அளவிற்குத் தாழ்ந்த மனிதனும் (மினிதன்?) இல்லை நான்.
       ஏற்கெனவே எழுதிய நூல்கள், “மறைமலை அடிகள் பிள்ளைத்தமிழ்”, க.நா.சு., ஜெ.கா. பற்றிய முழுவிமர்சனம், “புதிய மரபுகள்கவிதைத் தொகுப்பு, “நல்ல தமிழில் --பிழையின்றி-- எழுதுவோம், பேசுவோம்மற்றும் -தினமணி, கணையாழி, செம்மலர், தீக்கதிர், ஜனசக்தி, புதியஆசிரியன், மற்றும் பல்வேறு மலர்களில் எழுதிய கட்டுரைகள் இவற்றோடு கல்கிசிறுகதைப்போட்டியில் பரிசு பெற்ற இரண்டு சிறுகதைகள் உள்ளிட்ட எனது படைப்புகளை இந்த எனது வலைப்பூவில் இட வேண்டும் என்றும் ஆசைதான்.
        கையில் இருக்கும் இவற்றை தட்டெழுதி வெளியிட நேரம் கிடைக்காமல் நான் விரும்பாமலே நாடுமுழுவதும் --நாவால் நடந்துதிரிவது எனக்கே பிடிக்கவில்லை.
       ஆனால், ‘ஊடக வெளிச்சத்தில்நான் பேசும் பேச்சு சிலர் பலரைக் கவர்ந்து ஏதோ செய்து வருவதையும் பார்க்காமல் இருக்க முடியவில்லை.
        இதோ நேற்றைய தினம் -ஒரே நாளில் நான் கலந்து கொண்ட- மூன்று நிகழ்ச்சிகளையும் நேரில் கண்ட நல்ல ஆசரியரும்தாமே எழுதிய இசையமைத்த பாடல்களைத் தாமே எடுப்பான குரலில் பாட வல்லவரும், அதைவிட முற்போக்கான --வார்த்தைகளால் அல்ல வாழ்க்கையால் என்னைக் கவர்ந்தவருமான என் அருமைத் தோழர் பாவலர் பொன்.கருப்பையா அவர்கள் இன்று எனக்கு எழுதிய மின்னஞ்சல் எனது நிறைவற்ற மனதிற்கு’ ‘நாமும் ஏதோ செய்துகொண்டுதான் இருக்கிறோம்எனும் ஆறுதலைத் தந்தது. 
அதனை ஆவனப் படுத்த வேண்டும் என்பதற்காகவே நம் வலைப்பூவில் இடுகிறேன்….
---------------------------------------------------------------------------------------------------------------------

தோழமைமிகு நிலவன் அவர்களுக்கு.
வணக்கம்.  
செப்தம்பர் 25ல் தங்களுடன் கலந்து கொண்ட மூன்று நிகழ்வுகள் மனதிற்கு மிக இதமாக இருந்தது.
ஆலங்குடியில் கவிஞர் நீலாவின் மூன்று நூல்கள் வெளியீட்டு விழாவில் நமது அறிவொளி நாயகி திருமதி ஷீலாராணி சுங்கத் அவர்களை வரவழைத்து, தங்கள் தலைமையில்  நூல்கள் வெளியிட வைத்து, அறிவொளிக் குடும்பத்தினரை ஒருங்கிணைத்து அறிவொளிப் பாடல்கள், மனதில் நீங்கா நிகழ்வுகள் ஆகியவற்றை மீட்டுறுத்தியது மனதிற்குள் மலரும் நினைவுகளாக மலர்ந்தது.
அடுத்து அன்று பிற்பகல் தமிழ்நாடு அறிவியல் இயக்க அலுவலகத்தில் அம்மையாரோடு, பழைய அறிவொளித் தொண்டர்களும் புதிய சமூக ஆர்வலர்களும் சந்தித்த வேளையில், அறிவொளி வெற்றிவிழாவின் இருபதாம் ஆண்டினைக் கொண்டாடத் தாங்கள் முன்வைத்த ஆலோசனைகள் மனதைஅசைபோட வைத்தது.
நிறைவாக, அன்று மாலை புதுக்கோட்டை நகர்மன்றத்தில் பாவேந்தர் பாரதிதாசன் இலக்கியப் பேரவை நடத்திய எழில்மிகு ஏழு நூல்கள் வெளியீட்டில்,கவிஞர் தங்கம் மூர்த்தியின் கவிதை வெளியினிலேநூல் மதிப்பீட்டுரை அவ்விழாவிற்கே மகுடம் சூட்டியதாக அமைந்திருந்தது.
கவிஞர் பாலாவின் முற்போக்குச் சிந்தனைகளை த.மூ பதிவுகளிலில் இருந்ததிலும் பன்மடங்கு பகுத்துப் பாங்குற வீசிய உரத்தசிந்தனைகள்சுவைஞர்களை உணர்ச்சிப் பெருவெள்ளத்தில் மூழ்கடித்ததை அரங்கை அதிரவைத்த கரவொளிகளே சான்று பகர்ந்தது.
முத்தாய்ப்பாகத்  தங்களுக்கு முன்னதாக வரலாறு படைத்த வைரமங்கையர் நூலுக்குக் கருத்துரை வழங்கிய இரா.சம்பத்குமார், பெரியார் நாகம்மையின் கூற்றினைத் தவறாகப் புரிந்துகொண்டு மனிதர்களில் 99.9 சதம் ஆன்மீக வாதிகள்தான், வெறும் எழுத்துகளில் வேண்டுமானால் பகுத்தறிவு,நாத்திகம் காணப்படலாம் என்ற கொச்சைக் கூற்றுக்குத் தாங்கள் நான் 100 சதம் நாத்திகவாதி, பகுத்தறிவுப் பதிவுகள் முற்போக்கிற்கு வழிவகுக்கும் முனைப்பான பாதை என நெஞ்சுயர்த்தி பதிலடி கொடுத்தது என் போன்று அவையில் இருந்த 99.9 விழுக்காட்டினருக்கு பெருமையாயிருந்தது.
மெய்ப்பொருள் காணின் பொய்யுரை பொசுக்கும் போக்கினில் தயங்காதே என்னும் அய்யாவின் கூற்று தங்களால் செயலாக்கம் பெற்றது கண்டு பெருமிதம் கொள்கிறேன்.
தோழமையுடன்
பாவலர் பொன்.க
புதுக்கோட்டை
26-09-2011
-------------------------------------------------------------------------------------------------------------------------------

Blog Archive

படைப்புகளைப் பயன்படுத்த விரும்புவோர் ஆசிரியரிடம் முன்அனுமதி பெறவேண்டும். Blogger இயக்குவது.

பக்கப் பார்வைகள்

மின்னஞ்சலில் புதிய பதிவுகளைப் பெற :

My E.Books - http://valarumkavithai.blogspot.com/2017/04/blog-post_6.html

நட்பு வட்டம்

உலகத்தின் பார்வையில்

உலகத்தின் பார்வையில் இந்த வலை

Popular Posts

Google+ Followers

நட்பு வலைகள்

Our Facebook Page

எனது நூல்களில் சில...