‘மறைமலையடிகள் பிள்ளைத்தமிழ்’–காப்புப் பருவம் :

பாடல் எண்: 2 தொல்காப்பியர்

முன்னைப் பிறந்த மொழிபலவுள்
மூத்துச் சிறந்த மொழித்தமிழை,
முதிரா மொழியார் முனையுமுன்னே
முனைந்து காத்த காப்பியனே!
அன்னைத் தமிழின் அணையாக
அயல்எம் மொழிக்கும் அமையாத
அகமாய்ப் புறமாய்ப் பொருள்பிரிவை
அமைத்த புலமை தேர்பெரும!
பின்னைப் புலவர் பெறத்தமிழை
பேரார் எண்ணூற் றைந்திரட்டும்
பிழைதீர் நூற்பா, இயல்மூன்றில்
பிழிந்து தந்த பெரும்புலவ!
உன்னை அழைத்தேன், உனதுமொழி
உயர்வைக் காக்க உதவென்றே!
ஒருசேய் வடிவாம் மறைமலையை
உணர்ந்து காக்க உழைநின்றே!
----------------------------------------------------------------------

‘மறைமலையடிகள் பிள்ளைத்தமிழ்’ – காப்புப் பருவம் :
பாடல் எண்: 3 திருவள்ளுவர்

அளந்த சொல்லில் அளவின்றி
அரிய பொருளை அழுத்தி,உல(கு)
அனைத்தும் ஏற்க வாழ்வியலை
ஐந்நால் நூற்றாண் டதன்முன்னே
கிளந்த உண்மைக் கிளர்குறளை
‘கிளருந் தோறும் அறியாமை
கிளம்பும் வண்ணம்’ கிட்டித்து,
கீழோர் செயலால் மேலோரின்
தளர்ந்த மனக்குத் தாங்கியென
‘தமிழ்’என் சொல்லே தாராமல்,
தனித்தே இன்றும் நின்றோனே!
தமிழால் உலகை வென்றோனே!
வளர்ந்த தமிழை வழக்கொழியா
வண்ணம் காக்கக் காப்பாயே!
வள்ளுவ னே!உன் மறைமலையாம்
வடிவார் சேயைக் காப்பாயே!

1 கருத்து: