சமச்சீர் கல்வி: அரசும், ஆசிரியர்களும்

 - நா.முத்து நிலவன்
பாரதி பாடிய ‘வாராது போல்வந்த மாமணியைத் தோற்போமோ?’ எனும் வரிகளைத் தமிழர்கள் பலரும் மறந்துவிட்டோம். ஆனால், எப்போது நினைத்தாலும் மனசைப் பிசையும் அந்த ஏக்க வரிகளை மீண்டும் மீண்டும் நினைவுபடுத்துவதாகத்தான் இன்றைய தமிழகத்தின் கல்விச் சூழல் இருக்கிறது! பாரம்பரியம் மிகுந்த – பண்பாட்டுக்குப் புகழ்பெற்ற -- நமது தமிழ்ச்சமுதாயத்தில் மிகுந்துவரும் இன்றைய சிக்கல்களை தமிழ் இளைஞர்கள் புரிந்து கொள்ளாமல் இருப்பதற்கு, இவர்கள் கற்ற கல்வியே முதன்மைக்காரணமாக உள்ளது. ‘மெக்காலே’கல்விமுறை இவர்களைச் சமுதாயத்திலிருந்து பிரித்து, ‘தனக்குத்தேவையானதை அறிந்திருப்பதே அறிவு’ என்று நம்பவைத்துவிட்டது.
மனப்பாடக் கல்வி என்பதே,‘தனித்தே மனப்பாடம் பண்ணி, மதிப்பெண்களை அள்ளுவது’தானே? இதை மாற்றுவதுபற்றி, பற்பல ஆண்டுகளாக அறிஞர்கள் பற்பலர் பல்வேறுபட்ட கருத்துகளைச் சொல்லிச் சொல்லி அசந்து போனார்கள். கடைசியாக இன்றைய தலைப்புச் செய்திகளில் இடம்பெற்ற சமச்சீர் கல்வி இதற்கொரு நல்ல தீர்வைத் தரும் என்னும் நம்பிக்கையை எழுப்பிவருகிறது. ஆயினும்கூட முழுமனசாகவோ அரை மனசாகவோ தமிழகஅரசே முன்மொழிந்திருக்கும் இந்த நல்ல திட்டத்தை அரசே ‘கிடப்பில்போட’க்கூடிய அளவிற்குப் பல விஷயங்கள் நடந்து வருகின்றன என்பதுதான் இப்போது மேலோங்கி வரும் நமது கவலை.
சமச்சீர் கல்வியால் பயன்பெறப்போவது எதிர்காலச்சமுதாயம்தான் என்பதால் ‘இன்றைய பலனில்’ மட்டுமே குறியாகஇருக்கும் அரசியல்வாதிகள் இதைக் கண்டுகொள்ளாமல் இருப்பதைப் புரிந்துகொள்ள முடிகிறது. பெற்றோர்களுக்கு இதன் பயன் இன்னும் சரியாகப் புரிபடவில்லை. மாணவர்களுக்குப் புரிய இன்னும் சில ஆண்டுகளாகும்.ஆனால் புரிந்துகொள்ள வேண்டிய ஆசிரியர் சமுதாயம் என்னசெய்கிறது?
தனிப்பட்ட காவலர்களைவிடத் திருடர்கள் கூட்டம் எப்போதுமே ‘அட்வான்சாக’ இருக்கும் என்பது உலக உண்மை! அதுதான் சமச்சீர் கல்வி விஷயத்திலும் நடந்து வருகிறது! சமச்சீர் கல்வி தொடர்பாக மக்கள் கருத்தறியும் குழு, தமிழ்நாடு முழுவதும் சுற்றிவந்தபோது, ஆங்காங்கே அவர்களைச் சந்தித்து, கட்டுக்கட்டாக இதன் ‘தீமை’களைப் பற்றி எழுத்துவடிவத்தில் கொடுத்தவர்கள் ‘மெட்ரிக்’ பள்ளிகளின் தாளாளர் பெருமக்களே! சமச்சீர் கல்விக்கான ஆதரவுக் கருத்தைவிடவும் எதிர்ப்புக் கருத்தே அதிகமாக வந்ததைக் கண்டு அவர்களே திகைத்துப் போயினர் எனும் செய்தி சோகமானது என்பதைவிடக் கேவலமானது என்றுதானே சொல்லவேண்டும்?
 சம்பளக்கமிஷன் அறிக்கை குறித்துக் காட்டிய அக்கறையில் நூற்றில் ஒருபங்கைக் கூட சமச்சீர் கல்வி அறிக்கை குறித்து ஆசிரியர் அமைப்புகள் காட்டவில்லையே! ஏன்?!?  சம்பளக் கமிஷன் அறிக்கை குறித்து ஆசிரியர் அமைப்புகள் அக்கறை காட்டுவதை நான் குறை கூறவில்லை. அது ஆசிரியர்களின் உரிமை சார்ந்தது, நியாயமானதும்கூட. 1985-86இல் நடந்த ‘ஜேக்டீ’ போராட்டத்தில், தமிழகத்திலேயே அதிகபட்சமாக 55நாட்கள் சிறையிருந்த ஆசிரியர்களில் நானும் ஒருவன்!
எத்தனையோ போராட்டங்களை இணைந்து நடத்தியிருக்கும் ஆசிரியர் அமைப்புகள், தமது சமுதாயக் கடமையைச் சரியாகச்செய்யக் கிடைத்த நல்ல வாய்ப்பாகக் கருதி, ‘சமச்சீர் கல்வியை உடனே செயல்படுத்துக’ என்று, மாநில அளவில் ஒரேகுரலில் எதையும் செய்யவில்லையே! ஏன்?
அரசை எதிர்த்துக்கிளம்பும் ஆவேசஅமைப்புகள் ‘சமச்சீர்கல்வி எதிர்ப்பாளர்’களை எதிர்த்துச் சிறு சத்தம்கூட எழுப்பவில்லையே, ஏன்? அண்மையில் கடந்த 24-10-2009 சனிக்கிழமை அன்று மாநிலஅளவில் நடந்த ‘பத்துஅம்சக் கோரிக்கை’ பேரணியில்கூட பத்தாவது கோரிக்கையாகவே (‘சப்ஸ்டிட்யூட’ போல) சமச்சீர் கல்வி இடம்பெற்றதே! ஏன்? இது ‘பத்தோடு பதினொன்றுதான்’என்றுசொல்லாமல் சொல்கிறார்களா?   சங்கத்தலைவர்களின் அறிக்கையில்மட்டும் அவ்வப்போது சமச்சீர்கல்விஆதரவு இடம்பெற்றால் போதுமா?  ஆங்காங்கே சில கருத்தரங்கம் நடத்தியது மட்டும் போதுமா?அல்லது பணப்பலனுக்காகவோ ஆசிரியர் சிலரின் உரிமைக்காகவோ நடந்த மாவட்ட ஆர்ப்பாட்டங்களில் தலைவர்கள் சிலர் சிலநிமிடம் சமச்சீர் கல்வி பற்றிப் பேசியது மட்டும் போதுமா? அனைத்து ஆசிரியர் அமைப்புகளும் இணைந்து, மக்களையும் சேர்த்துக்கொண்டு இதற்கென்றே மிகப் பெரிய இயக்கங்களை நடத்த, என்ன தடை?
நல்லாசிரியர் விருதுபெற்ற பல்லாயிரக்கணக்கான ஆசிரியர்களும் இந்தத் தமிழ்நாட்டில் தானே இருக்கிறார்கள்? அவர்கள்கூட சமச்சீர் கல்வி குறித்து ‘வாய்மூடி மௌனிகளாக’ இருப்பது ஏன்? ஒருவேளை எப்போதுமே மௌனமாக இருப்பதற்காகத்தான் நல்லாசிரியர் விருது வழங்கப்படுகிறதா?
கல்விக் கடமையைச் சரியாகச் செய்யும்போதே சமுதாயத் கடமையையும் சேர்த்துச் செய்ததற்காகத்தான் நல்லாசிரியர் விருதுகள் வழங்கப்படுவதாக நான் கேள்விப்பட்டிருக்கிறேன். கல்வி சார்ந்த சமுதாயக் கடமை என்றால் ‘சமச்சீர் கல்வி’யை நடைமுறைப் படுத்த உதவுவதைவிட வேறென்ன சமுதாயக் கடமை நல்ல ஆசிரியர்களுக்கு  இருக்கமுடியும்? இப்போது மெட்ரிக் பள்ளிகளில் படித்துக்கொண்டிருக்கும் மாணவர்களின் பெற்றோர்களுக்கு, தமது பிள்ளைகள் படித்துவரும் ‘தரமான மெட்ரிக்’ கல்விக்கு சமச்சீர் கல்வித் திட்டத்தால் பாதிப்பு வந்துவிடுமோ எனும் சந்தேகம் எழுந்திருக்கிறது. இதேபோல, சமஸ்கிருதம் மற்றும் அரபி மொழிகளை ஓரியண்டல் பள்ளிகளில் படித்துக்கொண்டிருக்கும் மாணவர்களின் பெற்றோர்களுக்கு, தமது பாரம்பரிய மதவழி மொழிக்கல்வி மதிப்பிழந்துவிடுமோ எனும் அச்சமும் எழுந்திருக்கிறது. இந்தச் சந்தேகத்தையும் அச்சத்தையும் போக்கி, அவர்கள் விரும்பும் மதஉரிமையோடும் மதவழி மொழியோடும் தமிழ்நாட்டில தமிழ்மொழியைப் படித்தாகவேண்டிய அவசியத்தையும், சமச்சீர் கல்வியின் நன்மைகளையும் உணர்த்தவேண்டிய அவசியம்  உள்ளதே. இதை அரசும் ஆசிரியர்களும்தானே செய்யமுடியும்?
பத்தாம்வகுப்பு வரை எந்தவகைப் பள்ளியில் படித்தாலும் 11,12ஆம் வகுப்புகளை தமிழ்நாடு முழுவதும் ஒரே பாடத்திட்டத்தில்தான் படித்தாக வேண்டும்.  ஏற்கெனவே ஒன்றாம்வகுப்பு முதல் பத்தாம்வகுப்புவரை தமிழ்ப்புத்தகம் மட்டும் ஒன்றாகத்தான் இருக்கிறது எனவே மற்ற பாடப்புத்தகங்களும் ஒன்றுபோலவே இருப்பது குழந்தைகளுக்கு மட்டுமல்ல நாட்டுக்கும் நல்லது என்று எடுத்துச்சொன்னால் புரிந்துகொள்வார்கள். அதாவது தற்போது தமிழ்நாடு முழுவதும் 11, 12 வகுப்புகளில் இருப்பதுபோல அனைத்து வகுப்புகளுக்கும் ஒரே மாதிரியான தரமான பாடப்புத்தகம் ஆரம்பமுதலே வந்தால் பெற்றோர் வேண்டாமென்றா சொல்வார்கள்? அரசும், ஆசிரியர்களும் எடுத்துச்சொன்னால், நிச்சயம் ஒத்துழைப்பார்கள்.
அரசுப்பள்ளி, மெட்ரிக்பள்ளி, ஆங்கிலோ இந்தியன்பள்ளி, மற்றும் சமஸ்கிருத /அரபி ஓரியண்டல் பள்ளி என நால்வகைப் பள்ளிகளின் பத்தாம்வகுப்பு மாணவர்க்கு நால்வகைப் பாடப்புத்தகங்கள் போலவே தேர்வுகளும் மதிப்பெண் பட்டியல்களும் இதுவரை நான்கு வகையாகத்தான் இருந்துவந்தன. இந்த வழக்கம் கடந்த ஆண்டே முடிவுக்கு வந்துவிட்டது, அதாவது ‘சமச்சீர்கல்வியின் முதல்கட்டமாக, எந்தவகைப் பள்ளியில் எத்தனை மதிப்பெண்ணுக்குத் தேர்வு எழுதினாலும் அரசுப்பள்ளிபோல 500 மதிப்பெண்ணுக்கே மதிப்பெண் பட்டியல் வழங்கப்படும் என, சமச்சீர் கல்விக்கு முன்னோட்டமாக ‘சமச்சீர் மதிப்பெண் பட்டியல்’ வந்துவிட்டது! 11ஆம் வகுப்புக்கு வரும்போது நால்வகைக் கல்விமுறையும்தான் ஒன்றாகிவிடுகிறதே! இந்த முதல்கட்டத்தைச் சிறப்பாக நிறைவேற்றிய பள்ளிக்கல்வித்துறையை சமச்சீர் கல்வி ஆதரவாளர்கள் மனதாரப் பாராட்டினார்கள். வழக்கம் போல் எதிர்ப்பாளர்கள் நொந்துபோனார்கள்!
அடுத்த கல்வியாண்டில் ஒன்றாம் வகுப்பிற்கும் ஆறாம்  வகுப்பிற்கும் சமச்சீர் கல்வித்திட்டத்தின் அடிப்படையில் புதிய பாடத்திட்டம் எழுதுவதற்கான பணியைத் தமிழ்நாடு அரசின் பள்ளிக்கல்வித்துறை தற்போது தொடங்கியிருக்கிறது. இங்குதான் ‘தமிழக அரசின் கல்வித்துறையிலும் ‘சமச்சீர் கல்வி எதிர்ப்பாளர்கள் சிலரின் சமர்த்தான வேலைகள் நடந்துகொண் டிருக்கின்றனவோ எனும் சந்தேகம் எழும்படியாக சிலநிகழ்வுகள் அரங்கேறி வருகின்றன.
ஏற்கெனவே தமிழகஅரசு நடத்திவரும் ஆரம்பப் பள்ளிகளில் முதல் நான்கு வகுப்புகளுக்குப் பாடநூல்களுக்குப் பதிலாக விளையாட்டுமுறை அட்டைகள் வழியும்,ஆடல் பாடல் கதைகள் வழியாகவுமே பாடங்கள் கற்பிக்கப் படுகின்றன. பாடநூல் உண்டென்றாலும் முன்புபோல் அவற்றுக்கு முக்கியத்துவம் தரப்படுவதில்லை. பேரா.முத்துக்குமரன் குழுவினர் தந்திருக்கும் சமச்சீர்கல்வி அறிக்கையிலும் ஆரம்ப வகுப்புகளுக்குப் பாடநூல்களை விடவும் செயல்வழிக் கற்றலுக்குத்தான் முக்கியத்துவம் தரப்பட்டுள்ளது. ஆனாலும் கூட, ‘அடுத்த ஆண்டுமுதல் ஒன்றாம் வகுப்பிற்கும் ஆறாம் வகுப்பிற்கும், சமச்சீர்கல்வித் திட்டம் நடைமுறைக்குவரும்’ என்று அறிவித்திருக்கும் தமிழக அரசின் பள்ளிக் கல்வித்துறை, ‘ஒன்றாம் வகுப்பிலிருந்து பத்தாம் வகுப்பு வரையான பாடநூல் தயாரிக்கும் பணிகளை மட்டும் தொடங்கியது’ எப்படி? சமச்சீர்கல்வி அடிப்படையில் அட்டைகள் தயாரிக்கும் திட்டம் என்றால் சரி. பாடநூலுடன்....என்ற சமச்சீர்கல்வி அடிப்படையில் 'பாடநூல் தயாரிப்புமட்டும்' நுழைந்தது’ எப்படி? இதில் பாடநூல் எழுதுவோர்க்கும் ‘தேர்வு’ நடத்தப்பட்டது பெரிய நகைச்சுவை!
பாடத்திட்ட மாற்றம், பள்ளிச்சூழல் மாற்றம், தேர்வுமுறை மாற்றம், அண்மைப்பள்ளி, தாய்மொழிவழிக் கல்வி ஆகியவற்றோடு வரும் சமச்சீர் கல்வியை நடைமுறைப் படுத்தும்போது, பாடத்திட்ட மாற்றத்திலேயே குழப்பமென்றால் எப்படி?  பள்ளிக்கல்வித்துறை, பாடத்திட்ட மாற்றக் கருத்துருவை இணையதளத்தில் இட்டுவைத்தது பாராட்டுக்குரியது என்றாலும், பாடநூல் மாற்றம் தவிரவும் பார்க்கவேண்டிய சமச்சீர் கல்வித்திட்டப் பணிகள் பலஉள்ளனவே! ‘இது வழக்கமான பாடநூல் மாற்றம்தான், நாம் அஞ்சத்தேவையில்லை’ எனும் எதிர்க்கருத்தை மாற்றிட, சமச்சீர் கல்விக்கு உரிய மற்ற திட்டப்பணிகளையும் உடனே தொடங்கவேண்டும். இது தமிழக அரசின் கையிலேயே உள்ளது.
இதோடு, ‘மெட்ரிக்பள்ளிக் கல்வி முறையும், ஆங்கில வழியும் தொடரும் என்று பள்ளிக் கல்வி அமைச்சரே பேசியிருப்பதான ஒரு குழப்பத்தகவலும் வருகிறது. அரசும்,ஆசிரியர்களும் மௌனம்கலைத்து, கலந்துபேசிச் செயல்படவும் அதில் உறுதிகாட்டவும் வேண்டும். கல்வியாளர்கள் வசந்திதேவி, எஸ்.எஸ். இராஜகோபாலன் என ஒருசிலரே இதுபற்றிப் பேசுகிறார்கள். சமூக அக்கறையுள்ள ஆசிரியர்கள்--சங்கங்கள், பெற்றோர்கள், கல்விஅலுவலர்கள்,  சமூகஆர்வலர்கள் கலை-இலக்கியவாதிகள் எனப் பலரும் பங்களிக்க வேண்டிய நேரமல்லவா இது? இல்லாவிடில் வாராது போல்வந்த மாமணியாம் சமச்சீர்கல்வியைத் தமிழர்கள் தோற்றுவிடுவோமோ?’ என்று நினைக்கவே நெஞ்சம் பதறுகிறது! சமச்சீர் கல்வி என்பது, வெறும் கல்விக்கானதல்ல, சமத்துவ சமூகத்துக்கானது என்பதைப் புரிந்து கொண்டு, அனைவரும் இணைந்து விரைந்து செயல்பட்டால் கல்விமாற்றம் மட்டுமல்ல சமூகமாற்றமும் சாத்தியம் தான்!
 -------------------------------------------------------------------------------------------------------------------- வெளியிட்டமைக்கு நன்றி : ஞாயிறு, 29 நவம்பர் 2009  -- http://www.keetru.com/   
---------------------------------------------------------------------------------------------------------------------


4 கருத்துகள்:

  1. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  2. 100% சதவித உண்மை............ஆனால் ஊமை முயல்களாகவே வாழ்ந்து விட்டது தமிழ் சமூகம்.....99% அரசு பணியாளர்கள் சுயநலவாதிகளே! (மன்னிக்கவும் அது தான் உண்மை)இறுதியில் இரையாகி போனது எங்களை போல அப்பாவி நடுத்தர வர்க்க மாணவர்கள் மட்டுமே.........கலாச்சாரம், பண்பாடு, ஒழுக்கம்,நேர்மை அனைத்தும் தொலைந்து போன தமிழகத்தில் சமச்சீர் கல்வியை பற்றி சிந்திக்க யார்க்கும் நேரம் இல்லை.......இதை போன்ற தலைப்புகளில் பட்டிமன்றங்கள் நடத்துங்கள். பயனுளதாய் இருக்கும். பழைய பாடலா? புதிய பாடலா? இவை போன்ற தலைப்புகளில் தயவு செய்து பேசாதீர்கள். ஏனெனில் சினிமாவே உலகை அளிக்க வந்த நாச கருவி................
    நல்ல கட்டுரை வாழ்த்துகள் .........

    பதிலளிநீக்கு
  3. பயனுள்ள கட்டுரைக்கு நன்றி !

    மதிப்பெண்களை நோக்கியே இவர்களது மூளை சலவை செய்யபடுகிறது இது மாறனும் மாற்றப்படனும். பாடநூலை படிப்பதனால் மட்டுமே ஒருவன் அறிவாளி ஆகிவிடமுடியாது. அவரவர் அறிவு சார்ந்த படிப்பறிவை வளர்ப்பதன் மூலமாக தன்னை மேம்படுத்திக்கொள்ள முடியும். இதற்கு சமச்சீர் கல்வி சரியான தேர்வு. (ஆனா நம்ம அரசு அத விரைவா செய்யுமா???)

    மதிப்பிற்குரிய தோழி சரண்யா, எல்லா திரைப்படங்களும் உலகை அழிக்க வந்த நாசக்கருவி என்னும் உங்கள் கருத்தை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. ரசிகர்களின் ரசனை மாற்றம் இதற்கு பதில் சொல்லும். நல்ல திரைப்படங்களும் (சில) வந்துகொண்டுதான் இருக்கின்றது (எவன் பாக்குறான்).

    பதிலளிநீக்கு
  4. எல்லா முற்போக்கான திட்டங்களையும் அரசே செய்துவிடாது.
    சுயநலம் கலந்த பொதுநலம் தான் இன்றைய ‘நல்ல அரசியல்’!
    மக்கள் பங்கேற்பில்லாத எந்தத் திட்டமும், அரசு முன்மொழிந்தால் கூட செயல்வடிவில் வெற்றிபெறாது. வரதட்சணை ஒழிப்பு, தீண்டாமை ஒழிப்புக் கூட சட்டத்தில் இருந்தும் சமுதாய நடைமுறையில் வெற்றி பெறவில்லையே நெருடா?

    ஆங்கிலேயர் தனது சுயநலத்திற்காகக் கொண்டுவந்த ‘மெக்காலே’ கல்வி முறையை அவர்கள் மூட்டைகட்டி, அறுபது ஆண்டுகளான பின்னரும் நாமும் விடவில்லையே!
    ஆனால் அதிலுலும் ஒரு நன்மை இருந்தது - இந்திய சமுதாயத்தில் இவர்கள்தாம் படிக்கணும் என்றிருந்த சமுதாயக் கட்டுப்பாட்டை உடைத்து – அனைவரையும் ஓர்இடத்தி;ல் உட்கார வைத்ததும் அதே நாசகர கல்விமுறைதான்.. அதில் படித்தே சிந்தனையை வளர்த்துக்கொண்டவர்கள் எத்தனையோ பேர் இருக்கவில்லையா?

    சமச்சீர்க் கல்வி – வெறும் கல்விமுறை அல்ல, ஜனநாயக வளர்ச்சிக்கான ஒரு முக்கியமான முயற்சி என்று புரிந்து கொண்டால் எல்லாம் சரியாக நடக்கும்.
    என் கட்டுரையின் நோக்கமும் அதுதான்.

    பதிலளிநீக்கு